தமிழ் அரசியல் கைதிகளில் 54 பேருக்கு எதிராக வழக்கு

அரசாங்கம் துரித நடவடிக்ைக

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கிணங்க 54 பேருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதுடன் மூன்று பேர் தொடர்பில் சட்ட மாஅதிபரின் ஆலோசனை பெறப்பட உள்ளது. இதனை நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகள் 6 பேர் தொடர்பில் பொலிஸ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அவர்கள் தொடர்பில் தற்போதைக்கு எதுவும் தெரிவிக்க முடியாத நிலை உள்ளதாகவும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நேற்றைய தினம் மேற்படி குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றி வினவினர். அவர்களின் விரைவான விடுதலைக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதற்கு பதிலளிக்கும் முகமாகவே அமைச்சர் தலதா அத்துகோரல மேற்படி விடயங்களை சபையில் தெளிவுபடுத்தினார்.

இதற்கிணங்க தமிழ் அரசியல் கைதிகள் 54 பேருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டு உள்ளதாகவும் மூன்று பேர் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படுவதாகவும் மேலும் 6 பேர் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் குறிப்பிட்ட அமைச்சர் சிறைச்சாலைகளில் நிலவும் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு வருவதாகவும் கைதிகளுக்கான இடப்பற்றாக்குறை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறெனினும் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நீதிமன்றங்களுக்குள் ஆயுதங்களை எடுத்துச் சென்று 27 பேரை படுகொலை செய்த சம்பவங்கள் போன்று தற்போதைய ஆட்சியில் சம்பவங்கள் இடம்பெறாது என்றும் ஒரு குடும்ப நிறுவனத்தின் உரிமையாக நீதித்துறை விளங்கிய காலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மீண்டும் மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்த அமைச்சர், சிறைச்சாலைகளில் இடம்பெற்ற மேற்படி குற்றச்செயல்கள் தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தப்படும் என்றும் அத்துடன் பாடசாலைகளில் மாணவர்களுக்கு சட்டம் தொடர்பில் கற்பிப்பதற்கும் அதனை ஒரு பாடமாக மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், லக்ஷ்மி பரசுராமன்

Tue, 04/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை