யாராக இருந்தாலும் அரசு பாதுகாக்காது

பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அரசாங்கம் பாதுகாக்காது. ஆளும் கட்சியில் உள்ள அமைச்சர்களாக இருந்தாலும் சரி, பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் கபீர் ஹாசிம் வலியுறுத்தினார்.

அலரிமாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இந்தக் கருத்தை முன்வைத்தார். வனாத்தவில்லு பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரை விடுவிக்குமாறு உயர்மட்ட அரசியலில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தார். இது குறித்து கேட்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினருக்குத் தெரியப்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. எனவே இதுபற்றிய மேலதிக விடயங்களை வெளிப்படுத்த முடியாதுள்ளது. எனினும், ஆளும் கட்சியில் உள்ள அமைச்சர்களாக இருந்தாலும் சரி, பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்திருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எவரையும் பாதுகாக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்குக் கிடையாது என்றும் கூறினார்.

அரசியல் வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக செயற்படுவதே காலத்தின் தேவையாகும். பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பதில் பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக முன்னாள் பொலிஸ்மா அதிபர் இலங்கக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பாதுகாப்புச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

உரிய தரப்பினர் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தாது அமைதியான நிலைமையைப் பேணுவதற்கு சகலரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அமைச்சர் அழைப்புவிடுத்தார்.

மகேஸ்வரன் பிரசாத்

Tue, 04/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை