பயங்கரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார்?

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தொலைக்காட்சிகளுக்கு முன்னால் ஒற்றுமையாக இருப்பதுபோன்று நாடகமாடினாலும் திரைக்குப்பின்னால் ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டுக் கொள்வதாக ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா குற்றஞ்சாட்டினார்.

குண்டுத் தாக்குதல்களின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஒன்றுபட்டு செயற்படுவதுபோலக் காண்பித்துக் கொள்கின்றனர்.

ஜே.வி.பி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே ரில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

இவ்வாறான தாக்குதல்கள் நடைபெறும் என முற்கூட்டியே தகவல்கள் கிடைத்திருந்தும் அதனை உரிய தரப்பினருக்குத் தெரியப்படுத்தவில்லையென பொலிஸ்மா அதிபரின் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இந்த விவகாரத்தில் தனது கைகளைக் கழுவ முயற்சிக்கக் கூடாது. தாம் செய்த பிழைகளை சரிசெய்வதற்கே முயற்சிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதனைவிடுத்து தொலைக்காட்சிகளுக்கு முன்னால் தாம் ஒன்றிணைந்து செயற்படுவதுபோன்று ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் நாடகத்தை அரங்கேற்றுகின்றனர். உண்மையில் அவர்களுக்கிடையில் முரண்பட்டுக் கொண்டுள்ளனர். தமது அரசியல் தேவைகளுக்காக இவ்வாறான நாடகம் நடத்தப்படுகிறது என்றார்.

இதேவேளை, பொலிஸ்மா அதிபரை நீக்குவது தொடர்பில் பாராளுமன்றத்தில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே அதற்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது பற்றி தீர்மானிக்கப்படும் என ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸ்ஸாநாயக்க தெரிவித்தார்.

அவருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் என்ன? மேலும் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் யார் என்பது பற்றி ஆராய்ந்தே முடிவு எடுக்கப்படும் என்றார். அதேநேரம், பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்டத்தை தொழிற்சங்கங்கள் மற்றும் எதிரான அரசியல் கட்சிகளை முடக்குவதற்குப் பயன்படுத்த பிரதமர் முயற்சிக்கிறார். பயங்கரவாதத் தாக்குதல்களை பயன்படுத்தி தனக்கு சாதகமான இந்தச் சட்டத்தை நிறைவேற்ற முயல்கிறார் என்றும் குற்றஞ்சாட்டினார்.

(மகேஸ்வரன் பிரசாத்)

Tue, 04/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை