பாதுகாப்புச் சபையின் அவசர கூட்டத்திற்கு சிரியா அழைப்பு

கோலன் குன்றை இஸ்ரேலின் இறைமை கொண்ட பகுதி என அமெரிக்கா அங்கீகாரம் அளித்தது தொடர்பில் அவசர ஐ.நா பாதுகாப்புச் சபை கூட்டத்திற்கு சிரியா அழைப்பு விடுத்துள்ளது.

கோலன் குன்று இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி எனும் ஐ.நா தீர்மானத்தை மீறி அது இஸ்ரேலுக்குள் இணைக்கப்பட்ட பகுதி என அங்கீகரிக்கும் பிரகடனத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த திங்கட்கிழமை கைச்சாத்திட்டார்.

1967 மத்திய கிழக்கு யுத்தத்தின்போது சிரியாவிடம் இருந்து இஸ்ரேல் ஆக்கிரமித்த கோலன் குன்றின் சுமார் மூன்றில் இரண்டு பகுதி தொடர்ந்து இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ளது.

1981இல் இந்த பிராந்தியத்தை இஸ்ரேல் உத்தியோகபூர்வமாக தனது ஆட்புலத்திற்குள் இணைத்தபோதும் அப்போது ஐ.நா பாதுகாப்புச் சபையால் ஏகமனதாக நிராகரிக்கப்பட்டது.

“நிரந்தர அங்கத்துவ நாடு ஒன்றின் மூலம் பாதுகாப்புச் சபை தீர்மானம் அண்மையில் மீறப்பட்டது மற்றும் சிரியாவில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் பகுதியின் நிலைமை குறித்து பேச்சுவாரத்தைக்கு” அவசரக் கூட்டத்தை நடத்தும்படி பிரான்ஸ் ஏற்றிருக்கும் பாதுகாப்புச் சபை தலைமைக்கு சிரியா கடிதம் எழுதியுள்ளது.

எனினும் சந்திப்புக் குறித்து பாதுகாப்புச் சபை உடன் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த பரிந்துரை குறித்து பாதுகாப்புச் சபையில் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக இராஜதந்திரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பாதுகாப்புச் சபையில் அங்கத்துவம் வகிக்கும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் டிரம்பின் இந்த முடிவை நிராகரித்துள்ளன. இது மத்திய கிழக்கில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று அந்த நாடுகள் எச்சரித்துள்ளன.

கோலன் குன்று தொடர்ந்து இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியாக நீடிப்பதாக அமெரிக்காவின் நெருக்கமான நட்பு நாடுகளான பிரிட்டன் மற்றும் பிரான்ஸுடன் பெல்ஜியம், ஜெர்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகள் ஐரோப்பாவின் நிலைப்பாட்டை வெளியிட்டன.

பாதுகாப்புச் சபையின் மற்றைய நிரந்தர அங்கத்துவ நாடுகளான சீனா மற்றும் ரஷ்யா அமெரிக்காவின் முடிவை கடுமையாக எதிர்த்திருப்பதோடு குவைட்டுடன் இந்தோனேசியா மற்றும் தென்னாபிரிக்கா வலுவான பலஸ்தீன ஆதரவு கொண்ட நாடுகளாகும்.

Thu, 03/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை