சுகாதாரத்துறையில் வடக்கு, கிழக்கில் தமிழ்ப் பிரதேசங்கள் புறக்கணிப்பு

சுகாதாரத்துறை செயற்பாடுகளில் வடக்கு,  கிழக்கு தமிழ்ப் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் அது தொடர்பில் சுகாதார அமைச்சர் முக்கிய கவனம் செலுத்துவது அவசியமெனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. க. கோடீஸ்வரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  

அம்பாறை மாவட்டத்தில் திருக்கோயில் ஆதார வைத்தியசாலை பெரும் பற்றாக்குறையுடன் செயற்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டு ஒரு வருடமாகியும் இதுவரை அது திறக்கப்படாமல் உள்ளதாகவும் தெரிவித்தார்.  

தமிழ்ப் பிரதேசங்கள் சுகாதாரத்துறையில் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் சுகாதார இராஜாங்க அமைச்சரும் பாரபட்சமாகவே செயற்பட்டு வருவதாக குறிப்பிட்ட கோடீஸ்வரன் எம்.பி.,  மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் கலந்துரையாடிய பின் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  

பாராளுமன்றத்தில் நேற்று சுகாதாரம், மகளிர் விவகாரம் மற்றும் சிறுவர் அபிவிருத்தி தொடர்பான அமைச்சுக்கள் மீதான நிதியொதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், திருக்கோயில் ஆதார வைத்தியசாலை 120 வருடங்கள் பழமையானது. அங்கு வளங்கள் ஆளணி, கட்டிடங்ள், அம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் நிலவுகின்றன.  

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலிருந்து நான் தொடர்ந்தும் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் தெரிவித்து வந்துள்ளேன். எனினும் துரதிஷ்டவசமாக இக்குறைபாடுகள் இதுவரை நிவர்த்தி செய்யப்படவில்லை.  

அம்பாறை மாவட்டத்தில் ஏனைய வைத்தியசாலைகள் வெளிநாட்டு உதவிகள் பெறப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. எனினும் சுகாதார இராஜாங்க அமைச்சர் கட்சியை அடிப்படையாக வைத்து செயற்பட்டு வருகின்றார். இதனால் தமிழ்ப் பிரதேசங்கள் பெரும் புறக்கணிப்புக்குள்ளாகியுள்ளது. 

அண்மையில் 3வைத்தியசாலைகளுக்கு நிதியொதுக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டபோதும் திருக்கோயில் வைத்தியசாலைக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படாமை கவலைக்குரிய விடயமாகும்.  

இவற்றைக் கவனத்திற்கொண்டு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வடக்கு கிழக்கு, சுகாதாரத்துறை செயற்பாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கல்முனை வடக்கு வைத்தியசாலையை விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

(லோரன்ஸ் செல்வநாயகம், லக்ஷ்மி பரசுராமன்) 

 

Thu, 03/28/2019 - 08:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை