இஸ்ரேலுக்கு வெடிக்கும் பலூனை விட்ட காசா மீது வான் தாக்குதல்

காசாவில் இருந்து அனுப்பப்பட்ட வெடிக்கும் பலூன் ஒன்று இஸ்ரேல் வீடொன்றை சேதப்படுத்தியதை அடுத்து காசா போராளிகளின் பல இலக்குகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளது.

“காசாவில் இருந்து அனுப்ப ப்பட்ட வெடிக்கும் பலூன் ஒன்று வானில் வெடித்து இஸ்ரேலிய சமூகத்தினரின் வீடொன்று சோதமாக்கப்பட்டுள்ளது” என்று இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

“இதற்கு பதில் நடவடிக்கையாக இஸ்ரேலிய ஜெட்கள் மற்றும் தாக்குதல் ஹெலிகொப்டர்கள் ஹமாஸ் குழுவின் தீவிரவாத இலக்குகள் மீது மத்திய காசா பகுதியில் தாக்குதல் நடத்தியது” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்கு காசா நகரின் மேற்கு டயிர் அல் பலஹ்வில் காசாவில் ஆட்சி புரியும் ஹமாஸின் ஆயுதப் பிரிவான அல் கஸ்ஸாம் படையின் நிலை ஒன்றின் மீது தாக்குதல் இடம்பெற்றதாக பார்த்தவர் ஒருவர் விபரித்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி செய்தி வெளியாகவில்லை.

இஸ்ரேலுடனான காசா எல்லையில் வாராந்தம் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகளுக்கு இணையாக காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் தெற்கு இஸ்ரேலை நோக்கி எரியும் பட்டங்கள் மற்றும் வெடிக்கும் பலூன்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

2018 மார்ச் தொடக்கம் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 251 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் வாராந்த ஆர்ப்பட்டங்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலர் கொல்லப்பட்டிருப்பதோடு, பீரங்கி தாக்குதல்கள் மற்றும் வான் தாக்குதல்களிலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதே காலப்பிரிவில் இரு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

2008 ஆம் ஆண்டு தொடக்கம் காசாவில் இஸ்ரேல் மூன்று போர்களை நடத்தி இருப்பதோடு ஒரு தசாப்தத்திற்கு மேலாக காசா இஸ்ரேலின் முற்றுகையில் சிக்கியுள்ளது.

Fri, 03/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை