அமெரிக்கா–தலிபான் பேச்சில் முன்னேற்றம்

ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து அமெரிக்கா மற்றும் தலிபான்களுக்கு இடையில் கட்டாரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் கண்டிருப்பதாக இரு தரப்பும் அறிவித்துள்ளன.

ஏனைய நாடுகளுக்கு எதிராக வெளிநாட்டுப் படைகள் ஆப்கானை பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வது மற்றும் வெளிநாட்டு துருப்புகள் எவ்வாறு வெளியேறுவது என்பது குறித்து ‘விரிவான’ பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக தலிபான்கள் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

டோஹா சந்திப்பு ஆக்ககரமாக இருந்தது என அமெரிக்காவின் விசேட தூதுவர் சல்மே கலீல்சாத் குறிப்பிட்டுள்ளார்.

“இறுதியில் அமைதியை எட்டுவதை நோக்காக் கொண்டு புரிதலை நோக்கி மெதுவாக, உறுதியாக முன்னேறுகிறோம்” என்று கலீல்சாத் குறிப்பிட்டார்.

கடந்த புதன்கிழமை அமர்வுக்கு பின்னர் அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கான தயார்படுத்தல்களுடன் கலைவதற்கு இரு தரப்பும் தீர்மானித்ததாக தலிபான் பேச்சாளர் சமியுல்லா முஜாஹித் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனவரியில் இடம்பெற்ற ஆரம்ப சுற்று பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் கண்டதை அடுத்தே இரு தரப்பும் இந்த வாரம் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தன.

ஆப்கான் தரப்புகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை மூலமே அங்கு அமைதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அமெரிக்கா மற்றும் ஏனைய சக்திகள் உள்ளன. எனினும் ஆப்கான் அரசை ஏற்க மறுக்கும் தலிபான்கள் அதனுடன் பேச்சுவார்த்தைகளையும் நிராகரித்து வருகின்றனர்.

இந்த புதிய சந்திப்பில் தலிபான் இணை நிறுவனரான முல்லா அப்துல் பரதர் பங்கேற்றதோடு அவர் கலீல்சாத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். பரதர் கடந்த ஆண்டே பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானை பயன்படுத்துவதை தடுப்பது குறித்து அமெரிக்கா மற்றும் தலிபான்களுக்கு இடையில் விரைவில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகும் என்று தலிபான்களின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

Fri, 03/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை