சர்வதேச நீதிப்பொறிமுறைக்குள் இலங்கையை கொண்டு செல்வோம்

அமைச்சர் மாரப்பனவின் ஜெனீவா உரை தவறெனவும் சபையில் சுட்டிக்காட்டு

சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிப்பொறிமுறையொன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாவிட்டால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது முழுமையான சர்வதேச நீதிப்பொறி முறையொன்றில் இலங்கையை முன்னிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எச்சரிக்கை விடுத்தார்.

இலங்கையின் நீதிக் கட்டமைப்பில் சுயாதீன சர்வதேச நீதிபதிகளை உள்ளீர்க்க அரசியலமைப்பிலும், நாட்டின் சட்டத்திலும் இடமில்லையென வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கூறியது தவறு. அரசியலமைப்பில் அதற்கு இடமுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யுத்தத்தில் பங்கெடுத்த தரப்பு என்ற ரீதியில் உள்ளக நீதிப்பொறிமுறையில் அரசாங்கம் சுயாதீனமாக செயற்பட முடியாது. இதனாலேயே சுயாதீன சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பைக் கோருகின்றோம். இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஒரு தடவையல்ல மூன்று தடவைகள் எழுத்துமூலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இணங்கியுள்ளது. இருந்தபோதும் இன்னமும் அவர்கள் உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லையென்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார். கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்றையதினம் (நேற்றுமுன்தினம்) நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் முதற்தடவையாக பொறுப்புக்கூறல், நிலைமாறுகால நீதிப்பொறிமுறை மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை கால அட்டவணையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளது. இது மாத்திரமன்றி சர்வதேச நீதிபதிகளை உள்ளக நீதிப்பொறிமுறையில் உள்வாங்குவதற்கு சட்டத்திலோ அல்லது அரசியலமைப்பிலோ இடமில்லையெனக் கூறிவிட்டு, சுயாதீன சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடனான நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் மூன்றாவது தடவையாகவும் எழுத்துமூலம் இணக்கம் தெரிவித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இலங்கையின் அரசியலமைப்பின் 111 சரத்தின் படி நீதிபதிகள் பதவிக்கு நியமிக்கப்படுபவர்களின் தேசியம் தொடர்பில் எந்தவித கட்டுப்பாடுகளும் உள்ளடக்கப்படவில்லை. எனவே சுயாதீன சர்வதேச நீதிபதிகளை உள்ளக நீதிப்பொறிமுறையில் உள்வாங்கிக்கொள்வதில் எந்தவிதமான தடையும் இல்லை. முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பலவந்தமாக அகற்றுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டபோது, எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த விஜயதாச ராஜபக்ஷ, சர்வதேச சுயாதீன நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை குறித்து தனிநர் பிரேரணையொன்றைக் கொண்டுவந்திருந்தார். இந்தப் பிரேரணை இன்னமும் அவருடைய பெயரிலேயே உள்ளது.

இவ்வாறான நிலையில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சர்வதேச நீதிபதிகளை உள்வாங்க சட்டரீதியான தடை இருப்பதாகக் கூறியது தவறானது. அவர் அப்படிக் கூறியிருந்தாலும் நேற்றையதினம் (நேற்றுமுன்தினம்) நிறைவேற்றப்பட்ட பிரேரணையில், 30/1 பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்றுவதாக இணக்கம் காணப்பட்டது.

சுயாதீன சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகளின் பங்களிப்பைக் கொண்ட நீதிப் பொறிமுறைக்கு அரசாங்கம் இணங்கியிருந்தது. இதன் அடிப்படையில் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகளின் பங்களிப்புடனான நீதிப்பொறிமுறையொன்றை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் மூன்று சந்தர்ப்பங்களில் எழுத்துமூலமாகத் தனது இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளது.

அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கிய உறுதிமொழிகளுக்கு அமைய இணங்கிய விடயங்களை மேலும் காலதாமதம் இன்றி நடைமுறைப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் முழுமையான சர்வதேச நீதிப்பொறிமுறையொன்றுக்கு இலங்கையைக் கொண்டுசெல்வதைத் தவிர தமிழ் மக்களுக்கு எந்த மாற்றுவழியும் இருக்காது.

ஏற்கனவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டும் எனத் தமிழ் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கலப்பு நீதிமன்றமொன்றையே நாம் கோரி வருகின்றோம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மூன்று பிரேரணைகளிலும் இணங்கியவாறு சுயாதீன சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடனான நீதிப் பொறிமுறையொன்றை காலவரையறைக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையெனில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது முழுமையான சர்வதேச நீதிப்பொறிமுறையொன்றுக்குள் இலங்கையைக் கொண்டுசெல்வோம் என்றார்.

மகேஸ்வரன் பிரசாத்

 

 

 

Sat, 03/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை