மகளிர் சாப் சம்பியன்ஷிப் தொடர்; இலங்கை மகளிர் அணி பயிற்சிபோட்டியில்

இலங்கை தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணி, நேபாளத்தில் மார்ச் மாதம் 12ம் திகதி தொடக்கம் 22ம் திகதிவரை நடைபெறவுள்ள மகளிர் சாப் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதற்கான தயார்படுத்தலில் ஈடுபட்டு வருகின்றது.

தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் மகளிருக்கான சாப் கிண்ண தொடர் கடந்த டிசம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவிருந்தது. எவ்வாறாயினும், குறித்த போட்டித் தொடரினை நடத்துவதற்கு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், குறித்த போட்டித் தொடர் நேபாளத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மகளிருக்கான சாப் கிண்ணத் தொடரில், இலங்கை மகளிர் அணி நான்கு முறை பங்கேற்றுள்ளதுடன், அதில் அதிகபட்சமாக 2012 மற்றும் 2014ம் ஆண்டுகளில் அரையிறுதிக்கு தகுதிபெற்றிருந்தது. இறுதியாக நடைபெற்ற பருவகால போட்டித் தொடரில், இலங்கை மகளிர் அணி, பூட்டான் அணியை 2-–0 என வீழ்த்தியிருந்த போதும், அடுத்து நடைபெற்றிருந்த மாலைதீவு அணிக்கு எதிரான போட்டியில் 5-–0 எனவும், நேபாளத்துக்கு எதிரான போட்டியில் 2-–0 எனவும் தோல்வியை கண்டிருந்தது.

தற்போது, அடுத்த மாதம் நடைபெறவுள்ள போட்டித் தொடருக்கான பயிற்சியில், கடந்த 5 மாதங்களாக 29 பேர்கொண்ட அணியில் அங்கம் வகிக்கும் வீராங்கனைகள் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை மகளிர் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக திலக் அபோன்சு செயற்பட்டு வருவதுடன், உதவி பயிற்றுவிப்பாளராக தம்மிக்க அதுகோரலவும், கோல் காப்பு பயிற்றுவிப்பாளராக லலித் வீரசிங்கவும் செயற்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் 29 பேரிலிருந்து, சாப் கிண்ணத்துக்கான இறுதி 20 பேர்கொண்ட குழாம், பயிற்றுவிப்பாளர் குழாமால் இம்மாத இறுதிக்குள் பெயரிடப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இம்முறை நடைபெறவுள்ள சாப் கிண்ணத் தொடரில் பலம் மிக்க இந்தியா மற்றும் மாலைத்தீவுகள் இடம்பெற்றுள்ள பி குழுவில், இலங்கை அணி இடம்பிடித்துள்ளது. இந்த குழுவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தெரிவாகுவதுடன், தோல்வியடையும் அணி தொடரிலிருந்து வெளியேறும். ஏ குழுவில் பங்களாதேஷ், பூட்டான், பாகிஸ்தான் மற்றும் நேபாள அணிகள் இடம்பிடித்துள்ளன.

போட்டி அட்டவணை

மார்ச் 15 – மாலைதீவு எதிர் இலங்கை – சஹிட் ரங்கசலா மைதானம் (பி.ப 03.00)

மார்ச் 17 – இலங்கை எதிர் இந்தியா – சஹிட் ரங்கசலா மைதானம் (பி.ப 03.00)

Wed, 02/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை