ஆசிய தகுதிகாண் மெய்வல்லுனரில் சண்முகேஸ்வரன் சிறந்த நேரப் பெறுதி: சபான், ஆஷிக், சப்ரினுக்கு இரண்டாமிடம்

ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் தேசிய சம்பியனாக வலம்வந்து கொண்டிருக்கின்ற மலையகத்தைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் முதலாவது இடத்தைப் பெற்று இவ்வருடத்தை வெற்றியுடன் ஆரம்பித்து வைத்தார்.

குறித்த போட்டியை 30 நிமிடங்கள் மற்றும் 30.38 செக்கன்களில் நிறைவு செய்த அவர், தனது தனிப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுமதியைப் பதிவுசெய்தார்.

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கான தகுதிகாண் போட்டிகள் கடந்த 22ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றன.

இதில் போட்டிகளின் முதல் நாளான கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட சண்முகேஸ்வரன், குறித்த போட்டியை 30 நிமிடங்கள் மற்றும் 30.38 செக்கன்களில் நிறைவு செய்தார்.

எனினும், அவர் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கான அடைவு மட்டத்தினை 0.30.38 செக்கன்களினால் தவறவிட்டார். ஆனால் அவருக்கு குறித்த போட்டித் தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் மெய்வல்லுனர் அரங்கில் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ள ஹற்றனைச் சேர்ந்த கே. சண்முகேஸ்வரன், ஆண்களுக்கான நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் கடந்த வருடம் மாத்திரம் எட்டு தங்கப் பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்திருந்தார்.

இதேநேரம், குறித்த போட்டியில் மலையகத்தைச் சேர்ந்த மற்றுமொரு வீரரான டபிள்யு வட்சன் (31 நிமி. 03.78 செக்.) இரண்டாவது இடத்தையும், இலங்கை விமானப்படையின் பி. மதுரங்க (31 நிமி. 22.57 செக்.) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர். இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2ஆம் நாள் தகுதிகாண் போட்டிகளில் ஆண்களுக்கான 5 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட சண்முகேஸ்வரன், போட்டியை 14 நிமிடங்கள் 35.52 செக்கன்களில் நிறைவு செய்து மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முப்பாய்ச்சலில் சப்ரினுக்கு 2ஆவது இடம்

ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் தேசிய சம்பியனான வெலிகமையைச் சேர்ந்த சப்ரின் அஹமட் இரண்டாவது இடத்தைப் பெற்று ஆறுதல் அளித்தார்.

ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் இலங்கை இராணுவத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட சப்ரின் அஹமட், 16.02 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். இது சப்ரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட 3ஆவது அதிசிறந்த தூரமாகவும் பதிவாகியது.

அஷ்ரப்புக்கு ஏமாற்றம்

ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட கிழக்கு மாகாண வீரர் மொஹமட் அஷ;ரப், 4ஆவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார். குறித்த போட்டியை அவர் 10.69 செக்கன்களில் நிறைவு செய்தார்.

எனினும், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் தகுதிச் சுற்றில் முதலிடத்தையும் (10.60 செக்.), அரையிறுதியில் இரண்டாவது இடத்தையும் (10.52 செக்.) அவர் பெற்றுக்கொண்டார்.

மற்றுமொரு கிழக்கு மாகாண வீரரான பாசில் உடையார்,100 மீற்றர் அரையிறுதிப் போட்டியில் 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். குறித்த போட்டியை அவர் 10.78 செக்கன்களில் நிறைவு செய்தார்.

எனினும், முன்னதாக நடைபெற்ற தகுதிச் சுற்றில் கலந்துகாண்ட அவர், போட்டியை 10.79 செக்கன்களில் நிறைவுசெய்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சபானுக்கு ஆறுதல் வெற்றி

அண்மைக்காலமாக 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற மற்றுமொரு இராணுவ வீரரான மொஹமட் சபான், போட்டித் தூரத்தை 10.86 செக்கன்களில் நிறைவுசெய்து 6ஆவது இடத்தைப் பெற்றார்.

ஆனால், முன்னதாக நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியை அவர், 10.78 செக்கன்களில் ஓடிமுடித்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை,ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட சபான், போட்டித் தூரத்தை 21.86 செக்கன்களில் நிறைவு செய்து இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

தட்டெறிதலில் ஆஷிக் அபாரம்

ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் 44.15 மீற்றர் தூரம் தட்டை எறிந்ததன் மூலம் இராணுவத்தைச் சேர்ந்த இஸட்.ரி.எம் ஆஷிக் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

ஹிமாஷ, கிரேஷன் இலங்கை சாதனை

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்களுக்கன 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தெற்காசிய அதிவேக வீரரான ஹிமாஷ ஏஷான் புதிய இலங்கை சாதனை படைத்தார். குறித்த போட்டியை 10.22 செக்கன்களில் நிறைவு செய்த அவர், இலங்கையின் மாத்திரமல்லாது தெற்காசியாவின் அதிவேக வீரராக மீண்டும் மாறினார்.

எனினும், கடந்த வெள்ளக்கிழமை நடைபெற்ற ஆரம்ப சுற்றுப் போட்டியை 10.11 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தையும், அரையிறுதிப் போட்டியை 10.12 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தையும் ஹிமாஷ பெற்றுக்கொண்டார்.

எனினும், குறித்த போட்டியை நிறைவு செய்த போது காற்றின் வேகம் திசைகாட்டியில் முறையே மறை 3.1 எனவும், 2.6 எனவும் பதிவாகியிருந்தது.

இதனால் அவருடைய போட்டித் தூரத்தை இலங்கை சாதனையாக கவனத்தில் கொள்ளவில்லை.

இதேவேளை, ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட இளம் வீரர் கிரேஷன் தனன்ஜய முதல் தடவையாக தங்கப் பதக்கம் வென்று புதிய இலங்கை சாதனை நிலைநாட்டினார். போட்டியில் அவர் 16.71 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து திறமையை வெளிப்படுத்தினார்.

இதேநேரம், ஆண்களுக்கான முப்பாய்சசல் போட்டியின் நடப்புச் சம்பியனான சன்ஜய ஜயசிங்க, 3ஆவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார். போட்டியில் அவர் 15.66 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்தார்.

(பீ.எப் மொஹமட்)

Wed, 02/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை