இலங்கையுடனான இறுதி டெஸ்ட்:

ஆஸி. குழாத்தில் ஒரே ஒரு மாற்றம்

இலங்கை அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணிக்கு சகலதுறை வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் அறிமுக வீரராக அழைக்கப்பட்டுள்ளார்.  

அவுஸ்திரேலியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது இலங்கை அணிக்கு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. தொடர் தோல்வியை தவிர்க்க இந்தப் போட்டியில் வெல்வது அவசியமாகும். 

இந்தப் போட்டிக்கு ஆஸி. அணியானது அதன் குழாத்தில் மாற்றம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக முதல் டெஸ்ட் போட்டிக்கான குழாத்தில் இடம்பெற்றிருந்த மெட் ரென்ஷோவ் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இவர் முதல் டெஸ்ட் போட்டிக்கான குழாமில் இடம்பெற்றிருந்தாலும் அப்போட்டியில் விளையாடவில்லை. 

இந்நிலையில் இவர் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் லீக் தொடர்களில் ஒன்றான பிக் பேஷ் லீக் தொடரில் பிரிஸ்பேர்ன் ஹீட் அணிக்காக விளையாடவுள்ள காரணத்தினால் இவ்வாறு அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இவரின் இடத்திற்கு டெஸ்ட் போட்டிகளுக்கு அறிமுக வீரராக சலதுறை வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். 29 வயதுடைய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 2015ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற டி20 போட்டி மூலமாக சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். பின்னர் அதே சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டியிலும் அறிமுகம் பெற்றார்.  

இதுவரையில் 24 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் ஒரு சதம், ஐந்து அரைச்சதங்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 807 ஓட்டங்களை குவித்துள்ளார். இவரின் ஒருநாள் போட்டிகளுக்கான துடுப்பாட்ட சராசரி 42.47 வீதம் ஆகும். அத்துடன் பந்துவீச்சில் 22 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.  

17 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 128 ஓட்டங்களையும், 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 

இலங்கை மற்றும் ஆஸி. அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி கன்பேராவில் ஆரம்பமாகவுள்ளது. 

ஆஸி. குழாம் 

டிம் பெய்ன் (அணித்தலைவர்), ஜொய் ப்ரூன்ஸ், பெட் கம்மிண்ஸ், மார்கஸ் ஹாரிஸ், ட்ரெவிஸ் ஹெட், உஸ்மான், கவாஜா, மார்னஸ் லாபுஸ்சக்னே, நைதன் லயன், கேர்டிஸ் பெட்டர்சன், வில் புகெளஸ்கி, மிட்சல் ஸ்டாக், பீட்டர் சிடில், ஜை றிச்சட்சன், மார்கஸ் ஸ்டொய்னிஸ்     

Mon, 01/28/2019 - 15:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை