இல்மா சர்வதேச பாடசாலைகள் வலைப்பந்தாட்டம்

(பீ.எப் மொஹமட்)

கொழும்பு, இல்மா சர்வதேச பெண்கள் பாடசாலை ஒன்பதாவது வருடமாகவும் ஏற்பாடு செய்துள்ள 20 வயதுக்குட்பட்ட சர்வதேச பாடசாலை அணிகளுக்கிடையிலான வலைப்பந்தாட்டப் போட்டித் தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இப்போட்டித் தொடர் குறித்து ஊடகங்களை தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் சந்திப்பும்,அணிகளைக் குழுநிலைப்படுத்துவதற்கான குலுக்கல் நிகழ்வும் கடந்த 10ஆம் திகதி கொழும்பு மந்தரினா ஹோட்டலில் இடம்பெற்றது.

இப்போட்டித் தொடரில் ஆரம்பத்தில் 11 பாடசாலைகள் 4 குழுக்களாக பங்குபற்றுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், கொழும்பு சர்வதேச பாடசாலையின் கண்டிக் கிளை இறுதித் தருவாயில் வாபஸ் பெறுவதாக அறிவித்தைத் தொடர்ந்து ஏற்கனவே தயாரிக்கப்பட்ட போட்டி அட்டவணையை மாற்றியமைக்க ஏற்பாட்டுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இம்முறை போட்டிகளில் 10 அணிகள் ஏ, பி என இரண்டு குழுக்களாக போட்டியிடவுள்ளன.

ஏ குழுவில் நடப்புச் சம்பியன் கொழும்பு கேட்வே சர்வதேச பாடசாலை, பாணந்துறை லைசியம் சர்வதேச பாடசாலை, கண்டி கேட்வே சர்வதேச பாடசாலை, றோயல் சர்வதேச பாடசாலை, ஏஷியன் சர்வதேச பாடசாலை ஆகியன இடம்பெற்றுள்ளன.

பி பிரிவில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை, கொழும்பு சர்வதேச பாடசாலை, பிரிட்டிஷ் சர்வதேச பாடசாலை, புர்ஹானி செரெண்டிப் பாடசாலை ஆகியவற்றுடன் போட்டியை நடாத்தும் இல்மா பெண்கள் சர்வதேச பாடசாலையும் இடம்பெற்றுள்ளது.

இந்த இரண்டு குழுக்களிலும் ஒவ்வொரு அணிகளும் லீக் சுற்றில் ஒன்றையொன்றை எதிர்த்தாடவுள்ளது. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதலிரண்டு இடங்களையும் பெற்றுக் கொள்ளும் பாடசாலை அரையிறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறுவதுடன், அரையிறுதிப் போட்டிகளில் வெற்றிபெறும் பாடசாலை இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெறும்.

இதேவேளை, 3ஆவது, 4ஆவது இடங்களைப் பெற்றுக்கொள்ளும் பாடசாலைகள் கோப்பைக்கான அரையிறுதிகளில் விளையாட வேண்டும். அதில் வெற்றிபெறும் அணி 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொள்ளும்.

இதேநேரம், இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் இல்மா சர்வதேச பெண்கள் பாடசாலையின் அதிபர் பரீதா வஹாப், போட்டிகளுக்கு பிரதான அனுசரணை வழங்கும் நோலிமிட் நிறுவத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் றனீஸ் ஷெரீப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Thu, 01/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை