ஒருநாள் அரங்கில் சாதனை படைத்த கோஹ்லி

 பீ.எப் மொஹமட்

கிரிக்கெட் உலகின் ஓட்ட இயந்திரம் என்றழைக்கப்படுகின்ற இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி,சமீபகாலமாக சாதனைகளை வாரிக் குவிக்கும் நாயகனாக உருவெடுத்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற 2ஆவது ஒருநாள் போட்டியில்,விராட் கோஹ்லி தனது 39ஆவது ஒருநாள் சதத்தை பூர்த்திசெய்தார். இதனை 210 இன்னிங்ஸில் கோஹ்லி அடித்துள்ளார். இது ஒருநாள் போட்டிகளில் சேஸிங் செய்யும் போது,விராட் கோஹ்லி அடித்த 24ஆவது சதம் ஆகும். அத்துடன்,39ஆவது சதத்தை பூர்த்திசெய்ய,சச்சினுக்கு 350 இன்னிங்ஸ் தேவைப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் (15) நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பாடி 299 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி எனும் அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த கடினமான இலக்கைத் துரத்திய இந்திய அணி 4 பந்துகள் மீதிமிருக்கையில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்டஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா வெற்றியும் சமநிலையில் இருந்து,தொடரை உயிர்ப்புடன் வைத்துள்ளன.

முதல் போட்டியில் ஏமாற்றிய நிலையில், 2-வது போட்டியில் சிறப்பாக ஆடிய கோஹ்லி தனது ஒருநாள் அரங்கில் 39ஆவது சதத்தை நிறைவுசெய்தார். கோலியின் பொறுப்பான துடுப்பாட்டம்.இந்தியாவின் வெற்றிக்கு முக்கியகாரணமாகும். ஆட்டநாயகன் விருதைக் கோஹ்லிபெற்றார். கோஹ்லியின் சாதனைகள் பொதுவாக ஜனவரி 15ஆம் திகதி நிகழ்த்தப்பட்டு வருவது அதிசயமான ஒருவிடயமாக மாறிவிட்டது. தற்போது தொடர்ந்து 3ஆவது வருடமாக இதேநாளில் கோஹ்லி சதம் அடித்துள்ளார். கடந்த 2017 ஜனவரி 15இல் இங்கிலாந்து அணிக்கு எதிராக புனேயில் நடைபெற்றபோட்டியில் ஒருநாள் சதம், 2018 ஜனவரி 15இல் தென்னாபிரிக்காவுக்கு எதிராக சென்சூரியனில் நடைபெற்றபோட்டியில் டெஸ்ட் சதம், 2019 ஜனவரி 15இல் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஒருநாள் சதம் என 15ஆம் திகதியில் சதங்களை குவித்துவருகின்றார்.

சங்கக்காரவை முந்தியகோஹ்லி

விராட் கோஹ்லி 64வது சதத்தை பூர்த்திசெய்துள்ளார். சர்வதேச போட்டிகளில் பெற்றுக்கொண்ட ஒட்டுமொத்த சதங்களின் பட்டியலில் கோஹ்லி 3ஆவது இடத்தில் உள்ளார். சச்சின் 100 சதங்கள், ரிக்கிபொண்டிங் 71 சதங்கள்,குமார் சங்காக்கர 63 சதங்கள் அடித்துள்ளனர்.

வெளிநாடு சதங்களில் 2ஆவது இடம்

வெளி நாடுகளில் அடிக்கப்பட்டசதங்களின் பட்டியலில் 22 சதங்களுடன் கோஹ்லி 2ஆவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் 29 சதங்களுடன் சச்சின் இருக்கிறார். 3ஆவது இடத்தில் சனத் ஜயசூரிய மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் தலா 21 சதங்களுடன் உள்ளனர். அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் கோஹ்லிக்கு இது 5ஆவது சதமாகும். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய மண்ணில் அதிகசதங்கள் அடித்த ரோஹித் சர்மா மற்றும் குமார் சங்கக்காரவுடன் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டார்.

ஒருநாள் ஓட்டங்களில் 11ஆவது இடம்

ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்தவீரர்களில் 11ஆவது இடத்திற்குமுன்னேறிஉள்ளார். இலங்கை அணியின் முன்னாள் திலகரத்ன டில்ஷான் 303 இன்னிங்களில் 10,290 ஓட்டங்களைக் குவித்துள்ளார். ஆனால்,கோஹ்லி 210 இன்னிங்ஸ்களில் 10335 ஓட்டங்களைப் பெற்று டில்ஷானை முந்தினார். விரைவில் ஒருநாள் அரங்கில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேநேரம், குறித்தபட்டியலில் 10ஆவது இடத்தில் 10,405 ஓட்டங்களுடன் பிரைன் லாரா உள்ளார். எனினும்,முதல் 10 இடங்களில் இருக்கும் துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

2017ல் இருந்து அதிக ஒருநாள் சதம்

கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து விராட் கோஹ்லி அதிக சதங்களை அடித்துள்ளார். ரோஹித் சர்மா 2017இல் இருந்து 42 இன்னிங்ஸில் 12 சதங்களை அடித்திருந்தார். ஆனால் கோஹ்லி 42 இன்னிங்ஸ்களில் 13 சதங்களை அடித்துள்ளார்.

2ஆவது விக்கெட் ஜோடியான கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர்ஒருநாள் போட்டிகளில் 4117 ஓட்டங்களை இணைப்பாட்டமாக எடுத்துள்ளனர். முன்னதாக சச்சின்,டிராவிட் இணைந்து 4117 ஓட்டங்களை எடுத்திருந்தனர். இவர்களைவிட,குறைந்த இன்னிங்ஸில் கோஹ்லி,ரோஹித் இணை சாதனை படைத்தனர்.

Thu, 01/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை