விளையாட்டு சங்கங்களுக்கு முறைப்பாடுகளைத் தெரிவிக்க விசேட பிரிவு

அமைச்சர் ஹரீன் நடவடிக்கை

பொதுமக்களுடனான சந்திப்பை, செயற்திறன் மிக்கதாகவும், மக்களுக்கு மிகவும் பயன் அளிக்கக்கூடிய வகையிலும், ஒவ்வொரு புதன்கிழமையன்றும் நடத்துவதற்கு, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தீர்மானித்துள்ளார்.

இதன்பிரகாரம், விளையாட்டுத்துறை அமைச்சில், நேற்று 16 ஆம் திகதி புதன்கிழமை முதல், விசேட பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டது என அமைச்சின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

விளையாட்டுத்துறையைச் சார்ந்த விவகாரங்களில், கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகள், சிக்கல்கள் தொடர்பில், இங்கு விசேடமாக ஆராயப்படும்.

விளையாட்டுத்துறை அமைச்சரைச் சந்திப்பதற்காக எதிர்பார்க்கும் விளையாட்டுச் சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் அதிகாரிகள் உட்பட விளையாட்டு வீர, வீராங்கனைகள், ஒவ்வொரு புதன்கிழமையன்றும் குறித்த அமைச்சுக்கு வந்து, தமது முறைப்பாடுகளை அமைச்சரிடம் தெரிவிக்க முடியும்.

இவைகளுக்கு அன்றைய தினமே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, உடனடி தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம், விளையாட்டு மருத்துவ நிறுவனம், தேசிய விளையாட்டு விஞ்ஞானபீடம், போதை ஒழிப்பு நிறுவனம் மற்றும் சுகததாஸ விளையாட்டு தொடர்பகம் போன்ற, விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும், அனைத்துப் பிரிவுகளது அதிகாரிகளும், ஒவ்வொரு புதன்கிழமையன்று முழு நாளும், இவ்விசேட பிரிவில் இதற்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், அமைச்சின் ஊடகப்பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Thu, 01/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை