இரசாயன ஆயுதத்தைவிட மிகவும் பயங்கரம் நிறைவேற்று அதிகாரம்

இரசாயன ஆயுதத்தைவிடவும் மிகப் பயங்கரமான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இரசாயன ஆயுதங்கள் சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த 40 வருடங்களாக அமுலிலிருக்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினால் நாட்டுக்குப் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதனை ஒழிப்பதாகக் கூறி பலர் அதிகாரத்துக்கு வந்திருந்தாலும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இரசாயன ஆயுதத்தைவிடவும் மோசமான ஆயுதமாக நிறைவேற்று அதிகாரம் காணப்படுகிறது. இதனை ஒழிக்கவேண்டிய காலம் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி காலையிலிருந்த நிலைப்பாட்டை மீளவும் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பேனென அவர் அன்று கூறியிருந்தார். மேலும் ஒருவருடமே எஞ்சியிருக்கும் நிலையில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன் என்பதைக் கூறாமல், மீண்டும் அப்பதவிக்குப் போட்டியிடுவதற்கே ஜனாதிபதி முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

 

Thu, 01/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை