‘கம்பெரலிய’ மீண்டும் ஆரம்பம் அமைச்சரவை நேற்று அங்கீகாரம்

பட்ஜட்டில் ரூ. 48,000 மில் ஒதுக்க தீர்மானம்

இடைநிறுத்தப்பட்டிருந்த ‘கம்பெரலிய’ அபிவிருத்தி வேலைத்திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கு நேற்று அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

புதிய வருடத்தின் முதலாவது அமைச்சரவை நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் கூடியது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

இம்முறை சமர்ப்பிக்கப்படவுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வரவு செலவுத்திட்டத்தில் ‘கம்பெரலிய’ அபிவிருத்தி வேலைத் திட்டத்திற் காக 48,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.

கம்பெரலிய வேலைத்திட்டத்திற்காக ஒரு தேர்தல் தொகுதிக்கு 300 மில்லியன் ரூபா என்ற வீதத்தில் நிதியொதுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, நாட்டிலுள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளுக்கும் 48,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.

கடந்த வருடம் குருநாகல் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட கம்பெரலிய வேலைத் திட்டத்திற்காக தேர்தல் தொகுதியொன்றுக்கு 200 மில்லியன் ரூபா வீதம் நாடளாவிய ரீதியிலுள்ள 160 தேர்தல் தொகுதிகளுக்கு 3,200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.கிராமப் பகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் உட் கட்டமைப்பு வசதிகள் உட்பட 12 பிரிவுகளாக கம்பெரலிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளதுடன் இவ்வருடத்தில் மேற்படி வேலைத்திட்டத்திற்கான பிரிவுகளை மேலும் விஸ்தரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.கிராமப்புறங்களிலுள்ள வீதிகள், அணைகள், பயிர்ச்செய்கை நிலங்கள், தொழிற்சாலைகள், பாடசாலைகள், சுகாதார மற்றும் மத ரீதியான கட்டடங்கள் விளையாட்டு, கலைகளை ஊக்குவிக்கும் பிரிவுகள் என்பன கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலகத்தின் கீழ் பிரதேச செயலாளர் பிரிவுகள், கிராம சேவகர் பிரிவுகளுக்கூடாக பொது மக்கள் மற்றும் அரச அதிகாரிகளின் பங்கேற்புடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் வழிகாட்டலுக்கிணங்க, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் விசேட கவனத்துடன் மேற்படி கம்பெரலிய வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மேற்படி வேலைத்திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

 லோரன்ஸ் செல்வநாயகம்

 

Thu, 01/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை