கொழும்பு நகரிலுள்ள 100 அரச நிறுவனங்கள் பத்தரமுல்லைக்கு மாற்றம்

கொழும்பு நகரை அண்டியுள்ள சுமார் 100 அரச நிறுவனங்களை பத்தரமுல்லையில் அமைக்கப்படும் நிர்வாக நகரத்திற்கு மாற்ற இருப்பதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்தார். இதனுடன் இணைந்தாக சில வருடங்களில் கடுவெலவுக்கும் புறக்கோட்டைக்கும் இடையில் இலகு ரயில் சேவையொன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டல் வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட பிப்டி கே ஓர்கிட் சொகுசு ஹோட்டல் திறப்பு விழாவில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பிரபல  வர்த்தகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் சம்பிக்க ரணவக்க,

50 ஆயிரம் ஓர்கிட் மலர்ச்செடிகளுடன் கூடியதாக இந்த ஹோட்டல் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த ஹோட்டல் மிகவும் முக்கியம் வாய்ந்த இடமாக மாறும். ஏனென்றால் இந்த வலயத்தை நிர்வாக நகரமாக அறிமுகம் செய்ய இருக்கிறோம். கொழும்பை அண்டியுள்ள சுமார் 100 அரச நிறுவனங்களை இந்த வலயத்திற்கு கொண்டு வர எதிர்பார்க்கிறோம். இதனுடன் இணைந்ததாக இங்குள்ள சுற்றுச் சூழலும் மேம்படுத்தப்படும்.மத்திய வர்க்கத்திற்கு உகந்தாக இந்த பிரதேசம் உருவாகும்.

கடந்த காலத்தில் நிர்மாணத்துறையும் சுற்றுலா துறையும் வளர்ச்சி கண்டது.எதிர்வரும் சில வருடங்களில் நிர்மாணத்துறை சார்ந்த பாரிய வளர்ச்சியை இந்த பிரதேசம் காணும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் நிதி ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.(பா)

 

Thu, 01/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை