பிரேசில் அணை உடைந்ததில் தொடர்ந்தும் 300பேர் மாயம்

தென் கிழக்கு பிரேசிலில் இரும்புத் தாது சுரங்கத்தில் அணை சரிந்ததில் குறைந்தது 34பேர் உயிரிழந்திருப்பதோடு தொடர்ந்து 300பேர் வரை காணாமல்போயுள்ளனர்.   கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சரிவைத் தொடர்ந்து ப்ருமடின்ஹோ நகரத்திற்கு அருகில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.  

பிரேசிலின் மிகப்பெரிய சுரங்க நிறுவனமான வேல் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த அணை உடைப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மீட்பு நடவடிக்கை மற்றும் சேதங்களை சரி செய்வதற்காக வேல் நிறுவனம் 1.6பில்லியன் டொலர் நிதியை ஒதுக்கியுள்ளது.  

குறைந்தது ஒரு பஸ் வண்டியில் அழைத்துச் செல்லப்பட்ட ஊழியர்கள் பகல் உணவு உட்கொண்டிருந்த வேளையிலேயே அணை உடைந்து சேற்று நீர் அந்த பகுதியை மூழ்கடித்துள்ளது.  

பூமியை அகழும் இயந்திரங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களை பயன்படுத்தி கடந்த சனிக்கிழமை உயிர்தப்பியவர்களை தேடும் நடவடிக்கை இடம்பெற்றது. சுமார் 366பேர் காப்பாற்றப்பட்டதாக தீயணைப்பு படையினர் குறிப்பிட்டுள்ளனர்.  

பெருமளவிலான சகதி அணை வளாகத்தின் ஊடாக சென்று அருகிலுள்ள நிறுவனங்கள், தொழிலாளர்கள் வாழுகிற பகுதிகளில் நிரம்பியதோடு, அவர்களின் வீடுகள், வாகனங்களையும் சேதமாக்கியுள்ளன. 

சாலைகள் அழிக்கப்பட்டுவிட்டதால், இந்த சகதியில் சிக்கிய டஜன் கணக்கானோரை, ஹெலிகொப்டர் மூலம் மீட்க வேண்டியதாயிற்று. 

பாதுகாப்பு காரணமாக அங்கு வாழ்கின்ற பலரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

1976ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை, சுரங்கத்தில் இருந்து வருகின்ற நீரை சேமித்து வைக்க பயன்பட்டது. 12 மில்லியன் கன மீற்றர் நீரை சேமிக்கும் கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து எவ்வளவு கழிவு வெளியேறியுள்ளது என்று இன்னும் தெரியவில்லை.   

Mon, 01/28/2019 - 12:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை