நேர தகராறில் தனியார் பஸ் சாரதி பலி

Rizwan Segu Mohideen

தாக்குதல் மேற்கொண்ட இ.போ.ச. சாரதி மற்றும் நடத்துனர்கள் கைது

வெலிமடை பிரதேசத்தில் தனியார் பஸ் சாரதி ஒருவர் மீது இலங்கை போக்குவரத்து சபை சாரதி மற்றும் உதவியாளர் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த சாரதி பலியாகியுள்ளார்.

வெலிமடை பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் இன்று (19) பிற்பகல் 1.45 - 2.00 மணிக்கு இடையில் குறித்த சம்பவம்இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள மருந்தகத்திற்கு முன்னால் வைத்து குறித்த தனியார் பஸ் சாரதி மீது, இலங்கை போக்குவரத்து சபை சாரதி மற்றும் உதவியாளர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

நேரம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து குறித்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில், குருத்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த, காமினி வசந்த குமார எனும் 49 வயதான நபர் ஒருவரே மரணமடைந்துள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்ட சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் சிகிச்சைக்காக மீரகஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் சிகிச்சை பெறுவதற்காக பொலிஸ் பாதுகாப்பில் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தின் போது இலங்கை போக்குவரத்து சபை சேர்ந்த பஸ் சாரதி மற்றும் நடத்துனர் ஒருவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், வெளிமடை பொலிசாரால் அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை நாளைய தினம் (20) வெலிமடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Wed, 12/19/2018 - 19:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை