‘நான்காம் விதி’ ஒரு பார்வை

 ‘நான்காம் விதி’ ஒரு பார்வை

நான்காம் விதி என்ற குறும்படத்தின் விமர்சனம். இரண்டரை மணி நேரமாக விரித்துச் சொல்ல வேண்டிய படத்தை நறுக்கெனக் குறள் போல படைத்திருக்கிறார்கள். 

ஐந்து நபர்கள், ஒரு விபரீதம்; கனவின் க்ளைமாக்ஸ்... கவனம் ஈர்க்கும் ‘நான்காம் விதி’..!

'மெகா பட்ஜெட் கமர்ஷியல் திரைப்படங்கள் ஓடும் சத்யம் திரையரங்கில் ஒரு குறும்படமும் வெளியிடப்படுகிறது' என்கிற தகவலைக் கேட்டதும், ஆஜர் ஆனோம். இந்த ‘நான்காம் விதி’ என்கிற குறும்படத்தை இயக்கியிருக்கிறார், அனுசத்யா.

`காதலுக்காகக் காதலியையே இழக்கலாம்' என்ற கல்யாணப் பரிசு காலத்துக் கதைதான், `நான்காம் விதி'. ஆனால், அதைச் சொல்லியிருக்கும் விதம் நச்! மிக நேர்த்தியான திரைக்கதையால் பின்னப்பட்டிருக்கிறது படம். ஓர் இளைஞர், ஒரு மாற்றுத்திறனாளி, ஒரு திருநங்கை, ஒரு பெண் நிருபர்... இவர்களுக்கு அவ்வப்போது வரும் கனவுத் துணுக்குகள் ஒரு சங்கிலி போல் இணைந்து, ஒரு விபரீதம் நிகழவிருப்பதை சூசகமாகச் சுட்டிக் காட்டுகிறது. அந்த விபரீதத்தைத் தடுக்க அந்த நால்வரும் இணைகிறார்கள். இவர்களுடன் ஐந்தாவதாக ஒரு புகைப்படக் கலைஞரும் யதேச்சையாக இணைந்துகொள்ள, படம் வேகமெடுக்கிறது. கனவின் க்ளைமாக்ஸாகத் தோன்றும் ஒரு கொலையும், தற்கொலையும் தடுக்கப்படுகிறதா என்பதே இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ்.

வெறும் ஆக்‌ஷன் த்ரில்லர் என்றோ, அறிவியல் புனைவுப் படம் என்றோ மட்டும் எண்ணிவிடாமல், படத்தின் ஊடாக இடம்பெறும் ஓர் அழகிய காதலும், எது நல்ல காதல் என்று இறுதியில் வைக்கப்படும் ஒரு மெசேஜும் படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன. தினந்தோறும் வெளியாகும் ஒருதலைக் காதல் தொடர்பான கொலை மற்றும் தற்கொலைச் செய்திகள், பயத்தையும் சமுதாயம் குறித்த கவலையையும் உருவாக்கி வரும் சூழலில் இது போன்ற ஒரு படம் காலத்தின் தேவை!

இரண்டரை மணி நேரமாக விரித்துச் சொல்ல வேண்டிய படத்தை நறுக்கெனக் குறள் போல ரத்தினச் சுருக்கமாகத் தந்த இந்தப் படத்தின் குழுவுக்கு, படம் முடிந்ததும் ஆடியன்ஸ் அத்தனை பேரும் எழுந்து நின்று வாழ்த்து தெரிவித்தது, படத்தின் சிறப்புக்கு அத்தாட்சி!

`இரும்புத்திரை'  படத்தை வழங்கிய இயக்குநர் மித்ரனிடம் அசிஸ்டென்ட்டாக இருக்கிறார் இந்தக் குறும்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய அனுசத்யா. இயக்குநர் மித்ரன் பேசும்போது, ``இந்தப் படத்தை நானே இப்போதுதான் பார்க்கிறேன். என்னிடம் சின்னச் சின்ன நோட்ஸ் எடுத்துக் கொடுக்கிறார் என்ற அளவில்தான் அவரைத் தெரிந்து வைத்திருந்தேன். இந்தப் படத்தைப் பார்த்தபிறகுதான் அனுசத்யாவின் முழுத் திறமையைப் புரிந்துகொண்டேன். தொடர்ந்து இந்தக் குழுவினர் கமர்ஷியல் படங்கள் எடுத்து வெற்றிபெற வேண்டும்" என்று மனம் திறந்து பாராட்டினார்.

இயக்குநர் ரா.பார்த்திபன் பேசும்போது, ``இந்தப் படம் எனக்குப் பெரிய சர்ப்ரைஸிங்கா இருந்தது. ரொம்ப பிரில்லியன்ட்டான ஸ்க்ரீன் ப்ளே. இதுல எல்லா கேரக்டரைசேஷனுமே அற்புதமா இருந்தது. ஒரு பெண் வெற்றி பெற்றால் எனக்குப் பிடிக்கும்; ஏன்னா, ஒரு பெண் வெற்றி பெற்றால் ஒரு சமுதாயமே வெற்றி பெற்ற மாதிரி. அனுசத்யா மேலும் பல வெற்றிகளைப் பெற வேண்டும்" என வாழ்த்தினார்.

``உலகத்துல எந்த மொழியில எடுத்தாலும் ஜெயிக்கக்கூடிய கதை இது. இன்னும் சில ட்ரீட்மென்ட்டுகளோட இதை இரண்டரை மணி நேரப் படமா எடுத்தா பெரிய வெற்றிப் படமா அமையும்" என்று பாராட்டினார் நடிகர் மதன்பாப்.

எழுத்தாளர் பாலா (சுபா) பேசும்போது, ``நைஜீரியாவில் குறைந்த முதலீட்டில், உலகளாவிய தரத்தில், நல்ல லாபகரமான முறையில் சினிமாக்கள் உருவாகின்றன" என்று குறிப்பிட்டு அது பற்றி விளக்கியவர், ``தமிழிலும் அப்படிப் படங்கள் வெளியானால் தமிழ்த் திரையுலகம் நன்றாக இருக்குமே என்று பலமுறை எண்ணியுள்ளேன். இந்த `நான்காம் விதி' படம் எனக்கு அந்த நம்பிக்கையைத் தந்துள்ளது" என்று குறிப்பிட்டார்.

``துண்டுத் துண்டுக் கனவுகளைத் தொடர்ச்சியாகக் கோத்து ஒரு புள்ளியில் இணைக்கிறதென்பது ஒரு நல்ல எழுத்தாளருக்கு மட்டுமே கைவந்த கலை. அதை அனுசத்யா இந்தப் படத்துல அருமையாச் செய்திருக்காங்க. குறையே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இந்தப் படம் வெளியாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக அவர் மேலும் பல வெற்றிப் படங்களை அளிக்க வேண்டும்" என்று வாழ்த்தினார், சமீபத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணன். தனக்கான முதல் பாராட்டு விழாவாகவும் இந்தக் குறும்பட விழா மேடை அமைந்ததை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

``இதில் நடித்திருக்கும் அனைவருமே நடித்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது; வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இந்தப் படக்குழுவினரின் வெற்றி, வருங்கால சினிமா மாணவர்களுக்கான பாதையாக அமையட்டும்" என வாழ்த்தினார், ஆயிரம் படங்களுக்கு மேல் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கும் ஸ்டன்ட் இயக்குநர் ஜாக்குவார் தங்கம்.

``இந்தப் படத்தின் இயக்குநர் அனுசத்யாவையும், அவருக்கு பக்கபலமாக இருந்த ஷைலஜாவையும் அவர்கள் கல்லூரியில் படிக்கிற காலத்திலிருந்தே எனக்குத் தெரியும்" என்று குறிப்பிட்ட மன நல மருத்துவர் டாக்டர் அபிலாஷா, ``சினிமாவுக்காக இதில் அங்கங்கே கொஞ்சம் கொஞ்சம் மசாலா சேர்த்திருந்தாலும், கனவு தொடர்பாக இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் அத்தனை அடிப்படையான விஷயங்களும் சாத்தியமே" என்று சான்று வழங்கினார்.

நடிகரும் நடன இயக்குநருமான ராம்ஜியின் பேச்சு நெகிழ்ச்சியாக அமைந்திருந்தது. இந்தப் படத்தை எடுத்து முடிப்பதற்குள் இயக்குநர் அனுசத்யா சந்தித்த சவால்களையும், மனம் தளராமல் போராடி ஜெயித்ததையும் அவர் விவரித்தார். இந்தப் படத்தில் கனவு காணும் நால்வரையும் ஒருங்கிணைக்கும் முக்கிய கதாபாத்திரமான சைக்காலஜிஸ்ட் கதாபாத்திரத்தில், செம ஸ்டைலான லுக்கில் பிரமாதப்படுத்தியிருந்தார். "அனுசத்யா என்னிடம் சொன்ன வித்தியாசமான கதைதான் என்னை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உடனே ஒப்புக்கொண்டு நடிக்க வைத்தது. படப்பிடிப்பு முடிந்து, எல்லாக் காட்சிகளும் பதிவான ஹார்டு டிஸ்க் பழுதாகிப்போக இந்தக் குழுவினரின் அத்தனை கனவுகளும் ஏறக்குறைய நொறுங்கிப்போனது என்றே சொல்ல வேண்டும். ஆனால், விதியை எண்ணி நொந்து போகாத இவர்கள், இந்த `நான்காம் விதி'யைப் போராடி, திரும்பவும் மீட்டெடுத்தார்கள். ஆமாம், பழுதான ஹார்டு டிஸ்க்கின் தலைமை நெதர்லாந்து கம்பெனி வரை பேசிப் பேசி, ஆறு மாதங்களாகப் போராடி காட்சிகளை மீட்டெடுத்தார்கள். அனுசத்யாவின் இந்தப் போராட்டக் குணத்தைப் பார்த்ததும், அப்போதே தெரிந்துகொண்டுவிட்டேன், இவர் எதிர்காலத்தில் இன்னும் பல பெரிய வெற்றிகளை அடைவார்" என்று ராம்ஜி பேசி முடித்ததும், அரங்கமே கைதட்டி ஆர்ப்பரித்தது.

கண்ணை உறுத்தாத சுபாஷ் மணியனின் கேமரா, குமரேஷின் கச்சிதமான எடிட்டிங், கதையின் `பேக் போனாக' இருந்து அழகாக நகர்த்திச் செல்லும் ஜோன்ஸ் ராபர்ட்டின் அற்புதமான பின்னணி இசை என, படத்தின் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் அசாத்தியமானது.

எங்கேயோ, யாரோ ஐந்து பேர் சேர்ந்து கண்ணுக்கு எதிரே நடக்கவிருக்கும் ஒரு கொலையைத் தடுக்கிறார்கள் என்பதைச் சொல்லும் படமாக மட்டும் இந்த `நான்காம் விதி'யை எடுத்துக்கொள்ள முடியாது. காதல் என்ற பெயரில் வெறும் இனக்கவர்ச்சியால் உந்தப்பட்டு, ஏமாற்றிவிட்டாள் என்ற காரணத்தைச் சொல்லி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையம், கல்லூரி வாசல் என எங்கெங்கும் ஒரு தலைக் காதல் கொலைகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இப்படியான கொடுமைகளை அந்த இடத்தில் இருக்கும் அனைவருமே தடுக்க வேண்டும்; தடுக்க முடியும். மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதை மனதில் ஆழமாகப் பதிய வைக்கிறது இந்தப் படம்.

இந்தப் படத்துக்கு `நான்காம் விதி' என்ற தலைப்பு ஏன்? இந்தக் கேள்வி பார்வையாளர்கள் அனைவரின் மனதிலும் ஓடிக்கொண்டிருந்தது. அதற்குத் தனது நன்றியுரையின்போது விளக்கமளித்தார் அனுசத்யா.

``நியூட்டனின் மூன்றாம் விதி என்று கேள்விப்பட்டிருப்போம். அவர் ஐந்து ஃபிலாஸபி சொன்னார். அதுல நான்காம் ஃபிலாஸபி என்னன்னா, இதுதான் இப்படித்தான் நடக்கும்னு எதையும் நம்மால திட்டமிட்டுச் சொல்ல முடியாது; அதையும் தாண்டி நாம எதிர்பார்க்காததும் நடக்கும்கிற அந்த ஃபோர்த் ரூல். இது ஒரு ஹைப்பதெடிகல் ஃபிலாஸபி. அதைத்தான் படத்துக்கு வெச்சேன்" என்றவர் மறக்காமல் இந்தப் படத்துக்காக ஒத்துழைத்த அனைவருக்கும் மனம் நெகிழ நன்றி சொன்னார்.

Wed, 12/19/2018 - 17:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை