பூமியை வெப்பமாக்கும் அபாய ‘எல் நீனோ’ நிகழ்வு ஆரம்பம்

உலகெங்கும் கடுமையான காலநிலை எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலில் ‘எல் நீனோ’ காலநிலை நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அது ஏற்கனவே காலநிலை மாற்றத்தால் அதிகரித்திருக்கும் வெப்பத்தை மேலும் உயர்த்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

எல் நீனோ ஆரம்பிக்கப்பட்டிருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இது 2024ஐ உலகின் வெப்பமான ஆண்டாக உருவாக்க வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோன்று மிக தீர்க்கமாக இருக்கும் 1.5 பாகை செல்சியஸ் என்ற வரம்பை உலகம் கடக்க இது உதவக்கூடும் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.

இது உலக காலநிலையையும் பாதிக்கக் கூடியதாக உள்ளது. இது அவுஸ்திரேலியாவில் வறட்சியை கொண்டுவரவும் தென் அமெரிக்காவில் அதிக மழையையும் இந்தியாவின் பருவமழையை பலவீனப்படத்தவும் வாய்ப்பு உள்ளது.

இந்த நிகழ்வு அடுத்த வசந்த காலம் வரை நீடித்த பின் அதன் பாதிப்பு குறைய வாய்ப்பு உள்ளது.

கடந்த பல மாதங்கள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்குப் பின்னரே பசிபிக் பெருங்கடலில் எல் நீனோ நிகழ்வு ஆரம்பித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

“பல மாதம் இடம்பெற்ற எமது கணிப்பை அடுத்து இந்த நிலை தற்போது அதிகரித்திருப்பதோடு அதன் தீவிரத்தின் அடிப்படையில் இந்த ஆண்டின் இறுதியில் அது உச்சத்தை எட்டும் என்று தெரிகிறது” என பிரிட்டன் வானிலை அலுவலகத்தின் நீண்ட கால கணிப்புகளுக்கான தலைவர் அடம் ஸ்கைப் தெரிவித்துள்ளார்.

“அடுத்த ஆண்டு உலக வெப்பநிலையில் புதிய சாதனை ஒன்று நிச்சயம் சாத்தியமானது. அது எல் நீனோ இயக்கம் எப்படியானது என்பதை பொறுத்தது. இந்த ஆண்டு இறுதியில் ஏற்படும் பெரும் எல் நீனோ ஒன்று 2024இல் உலக வெப்பநிலை புதிய சாதனை ஒன்றை எட்டுவதற்கு அதிக வாய்ப்பை உருவாக்கும்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எல் நீனோ என்பது புவி வெப்பமாதலின் காரணமாகப் புவியின் கிழக்கு மற்றும் மத்திய பசிபிக் பெருங்கடலின் ஏற்படக்கூடிய ஒர் ஒழுங்கற்ற காலநிலை மாற்றத்தை குறிக்கிறது.

இந்த இயற்கை நிகழ்வு பூமி எங்கும் காலநிலை அமைப்பில் மிகவும் சக்திவாய்ந்த ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.

எல் நீனோ எனப்படும் வெப்ப நிலை, ஒவ்வொரு இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது. சூடான நீர் தென் அமெரிக்காவின் கடற்கரையிலிருந்து மேற்பரப்புக்கு வந்து, கடல் முழுவதும் பரவி, வளிமண்டலத்தில் குறிப்பிடத்தக்க அளவு வெப்பத்தை ஏற்படுத்துகிறது.

2016 ஆம் ஆண்டு உட்பட உலகின் அதிக வெப்பமான ஆண்டுகள் வழக்கமாக சக்திவாய்ந்த எல் நீனோ நிகழ்வை தொடர்ந்து வந்த ஆண்டில் இடம்பெற்றுள்ளது.

எல் நீனோவின் தாக்கம் சில மாதங்கள் பின்தங்கக் கூடும் என்றபோதும் உலகம் முழுவதும் உணரப்படும்.

அவுஸ்திரேலியா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் வறண்ட வானிலையும், இந்தியாவில் பருவமழை பலவீனமடையும் சாத்தியமும் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். தென் அமெரிக்க மாநிலங்கள் வரும் குளிர்காலத்தில் ஈரமாக இருக்கும். எல் நீனோ பொதுவாக ஆபிரிக்காவில் வறட்சியை வலுப்படுத்துகிறது.

இவ்வாறான நிலை இடம்பெற்றால் எதிர்வரும் இந்த காலநிலை நிகழ்வால் பெரும் அளவு மனித மற்றும் பொருளாதார இழப்புகள் இடம்பெறக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

1997–98 வலுவான எல் நீனோ நிகழ்வின் கடும் புயல் மற்றும் வெள்ளத்தால் சுமார் 23,000 உயிரிழப்புகளுடன் 5 டிரில்லியன் டொலருக்கு மேல் இழப்பை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது.

இந்நிலையில் இம்முறை நிகழ்வு உலகின் மிக வெப்பமான ஆண்டான 2016 ஆம் ஆண்டை பின் தள்ளி 2024 ஆம் ஆண்டு சாதனை படைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. 1850–1900 வரையிலான காலகட்டத்தில் உள்ள சராசரியை விட தற்போது உலக வெப்பநிலை 1.1 பாகை செல்சியஸ் அதிகமாக உள்ளது.

எனினும் எல் நீனோ நிகழ்வு வெப்பநிலையை 0.2 பாகை செல்சியஸால் அதிகரித்து உலகம் அனுபவிக்காத வெப்பநிலை அதிகரிப்பை ஏற்படுத்தக் கூடும். இது பாரிஸ் காலநிலை உடன்படிக்கையின் முக்கிய அம்சமான 1.5 பாகை செல்சியஸ் வரம்பை நெருங்குவதாக இருக்கும்.

இந்த வரம்பு அடுத்த சில ஆண்டுகளில் தற்காலிமாக முறியடிக்கப்படக் கூடும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

Sun, 06/11/2023 - 17:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை