கரககததல கடயறகள படக மழகயதல 79 பர உயரழபப

100க்கும் அதிகமானோரை மீட்ட சொகுசுக் கப்பல்

தெற்கு கிரேக்கத்தின் கடற்கரைக்கு அப்பால் குடியேறிகளை ஏற்றிய மீன்பிடி படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 79 பேர் உயிரிழந்ததோடு 100க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளனர்.

இது கிரேக்கத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய குடியேறிகள் தொடர்பான அனர்த்தம் என குறிப்பிட்டிருக்கும் அந்நாட்டு அரசு மூன்று நாள் துக்க தினத்தை அறிவித்துள்ளது.

கடலோரக் காவல் படையினரின் உதவியை நிராகரித்த நிலையில் அந்தப் படகு பீடோஸ் நகருக்கு அப்பால் சுமார் 80 கிலோ மீற்றர் தொலைவில் மூழ்கியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய எல்லை நிறுவனமான பிரான்டெக்ஸுக்கு சொந்தமான விமானம் ஒன்றினால் இந்தப் படகு கடந்த செவ்வாய்க்கிழமை சர்வதேச கடற்பகுதியில் அவதானிக்கப்பட்டதாக கடலோர காவல்படை கூறியது. அப்போது படகில் இருந்த ஒருவரும் உயிர் காப்பு அங்கியை அணிந்திருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கிரேக்க நிர்வாகம் பல முறை இந்தப் படகை செய்மதி தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு உதவி அளிக்க முன்வந்தபோதும், படகில் உள்ளவர்கள் அதனை நிராகரித்திருப்பதோடு, “எமக்கு இத்தாலிக்குச் செல்வதை தவிர வேறு தேவை இல்லை” என்று பதிலளித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த புதனன்று படகின் இயந்திரம் செயலிழந்து சில நிமிடங்களிலேயே படகு முழுமையாக மூழ்கியுள்ளது. தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோதும் கடும் காற்றுக்கு மத்தியில் அதனை செயற்படுத்துவதில் சிரமம் நீடித்து வருகிறது.

காப்பாற்றப்பட்ட பலருக்கு நீச்சல் தெரிந்திருக்கவில்லை என்றும் அவர்கள் படகு உடைந்து சிதறிய இடிபாடுகளைப் பிடித்துக்கொண்டிருந்தனர் என்றும் மீட்புப் பணியாளர்கள் கூறினர்.

தேடல் பணிகளில் மெக்சிகோவைச் சேர்ந்த பெருஞ்செல்வந்தரின் சொகுசு கப்பல் பேருதவி புரிந்துள்ளது. சொகுசுப் படகில் 106 பேர் காப்பாற்றப்பட்டதாக ப்ளும்பேர்க் செய்தி நிறுவனம் கூறியது.

அந்த சொகுசுக் கப்பல் மெக்சிகோவில் ‘வெள்ளி அரசர்’ என்று அழைக்கப்பட்ட அல்பெர்ட்டோ பைலியெரெஸுக்குச் சொந்தமானது. ஒரு காலத்தில் உலகின் மிகப் பெரிய வெள்ளி உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளராக இருந்த அவர் கடந்த ஆண்டு காலமானார்.

இந்தப் படகு லிபியாவில் இருந்து இத்தாலியை நோக்கி பயணித்திருப்பதோடு படகில் பெரும்பாலும் 20 வயதுகளில் இருக்கும் இளைஞர்களே இருந்துள்ளனர். இதில் ஆட்கடத்தல் சந்தேகத்தில் மூவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுவதாக கிரேக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மத்தியதரை கடவை கடக்கும் முயற்சியில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். கடந்த பெப்ரவரியில் தெற்கு இத்தாலியின் கலப்ரியா பிராந்தியத்தில் கட்ரோ நகருக்கு அருகில் குடியோறிகள் படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 94 பேர் உயிரிழந்தனர்.

மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் இருந்து வரும் அகதிகள் மற்றும் குடியேறிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைய கிரேக்கம் பிரதான பாதை ஒன்றாக உள்ளது.

இந்த ஆண்டில் 70,000க்கும் அதிகமான அகதிகள் மற்றும் குடியேறிகள் ஐரோப்பாவை அடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இத்தாலியில் கரையொதுங்கி இருப்பதாக ஐ.நா தரவுகள் குறிப்பிடுகின்றன.

Fri, 06/16/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை