‘ஒபெக்’ நாடுகளின் திடீர் எண்ணெய் உற்பத்தி குறைப்பால் விலை உயர்வு

அமெரிக்கா கடும் அதிருப்தி

உலகின் பல மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி நாடுகளும் உற்பத்தியை குறைக்கும் அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

பிரண்ட் மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 5 டொலருக்கு மேல் அல்லது 7 வீதமாக அதிகரித்து நேற்றைய (03) வர்த்தக ஆரம்பத்தில் 85 டொலர்களுக்கு மேல் உயர்ந்திருந்தது.

சவூதி அரேபியா, ஈராக் மற்றும் பல வளைகுடா நாடுகளும் நாளுக்கு ஒரு மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் குறைப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்ததை அடுத்தே விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

வரும் மே மாதம் மசகு எண்ணெய் உற்பத்தி குறைப்பு அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் சில நாடுகள் ஏற்கனவே உற்பத்தியை குறைக்க ஆரம்பித்துள்ளன.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததை அடுத்து எண்ணெய் விலை அதிகரித்தபோதும், தற்போது மோதலுக்கு முன்னர் இருந்த நிலைக்கு விலை குறைந்துள்ளது. என்றாலும் எரிசக்தி விலையை குறைக்கும் பொருட்டு உற்பத்தியை அதிகரிக்கும்படி உற்பத்தி நாடுகளை அமெரிக்கா கேட்டிருந்தது.

கடந்த ஆண்டில் வலுசக்தி மற்றும் எண்ணெய் விலை அதிகரித்தது பணவீக்கத்தை உயர்த்தக் காரணமானதோடு அது வீட்டுப் பொருளாதாரத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.

ஒபெக் பிளஸ் உற்பத்தி அங்கத்துவ நாடுகளே இந்த எண்ணெய் உற்பத்திக் குறைப்பை மேற்கொண்டுள்ளது. இந்த அமைப்பு உலக மசகு எண்ணெய் உற்பத்தியில் சுமார் 40 வீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

இதில் சவூதி அரேபியா நாளுக்கு 500,000 பீப்பாய்களையும், ஈராக் 211,000 பீப்பாய்களையும் குறைக்கவுள்ளன. ஐக்கிய அரபு இராச்சியம், குவைட், அல்ஜீரியா மற்றும் ஓமான் நாடுகளும் உற்பத்திக் குறைப்பை மேற்கொண்டுள்ளன.

“எண்ணெய் சந்தையின் ஸ்திரத்தன்மைக்கு உதவும் நோக்குடனான முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒன்றாகவே இது மேற்கொள்ளப்பட்டது” என்று சவூதி வலுசக்தி அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் புதிய எண்ணெய் வெட்டு தொடர்பில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபைக்கான ஆலோசகர் ஒருவர் கூறும்போது, “இந்தத் தருணத்தில் உற்பத்திக் குறைப்பு பொருத்தமானதாக நாம் நினைக்கவில்லை. அது சந்தையில் நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தும் என்பதோடு நாம் அது பற்றி தெளிவாக உள்ளோம்” என்றார்.

ஏற்கனவே இந்த ஆண்டு இறுதிவரை நாள்தோறும் 2 மில்லியன் பீப்பாய் எண்ணெயைச் சந்தையிலிருந்து அகற்றும் திட்டம் நடப்பில் உள்ளது. அதனுடன் நாள்தோறும் 1.2 மில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி குறைக்கப்படவுள்ளது.

இதன்படி உலகின் பெட்ரோலிய உற்பத்தியில் மொத்தம் சுமார் 3 வீதமாக குறைவுள்ளது. இது எண்ணெய் விலையை மேலும் அதிகரிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

Tue, 04/04/2023 - 11:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை