நீண்ட தூர ஏவுகணையை பாய்ச்சியது வட கொரியா

பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம்

தென் கொரியா மற்றும் ஜப்பான் தலைவர்கள் வரலாற்று முக்கியம் வாய்ந்த சந்திப்பு ஒன்றில் பங்கேற்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய பலிஸ்டிக் ஏவுகணையை நேற்று (16) வீசியுள்ளது.

நேற்றுக் காலையில் நீண்ட தூர ஏவுகணை ஏவப்பட்டதை ஜப்பான் மற்றும் தென் கொரிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். சுமார் 1000 கிலோமீற்றர் தூரம் தாவி இருக்கும் இந்த ஏவுகணை ஜப்பானின் மேற்காக உள்ள கடல் பகுதியில் விழுந்துள்ளது.

வட கொரியா மற்றும் அமெரிக்க கூட்டு கடற்படை பயிற்சியை நடத்தி வரும் நிலையில் வட கொரியா ஒரு வாரத்துக்குள் நடத்தும் நான்காவது ஏவுகணை சோதனையாக இது உள்ளது. முன்னதாக அது கடந்த வாரம் வியாழன், சனி மற்றும் திங்கட்கிழமை குறுகிய தூர பலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியது.

12 ஆண்டுகளில் முதல் முறை ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தென் கொரிய ஜனாதிபதி யூ சூன் யியோல், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை நேற்று மாலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மறுபுறம் கொரிய தீபகற்பத்தில் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் நடைபெற்று வரும் தென் கொரியா மற்றும் அமெரிக்கா இடையிலான கடற்படை பயிற்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிரமாண்டாக இடம்பெற்று வருகிறது. இது வட கொரியாவின் ஆத்திரத்தை தூண்டியுள்ளது.

இதில் வட கொரியா வீசும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமெரிக்காவின் தலை நிலம் வரை செல்லக்கூடிய திறன்படைத்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 03/17/2023 - 08:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை