அத்தியாவசிய சேவைகளை சீர்குலைத்தால் கடும் நடவடிக்கை

- இயல்பு நிலையை ஸ்தம்பிக்கச் செய்ய இடமளிக்க முடியாது
- சட்டத்தை முறையாக செயற்படுத்துவதற்காகவே வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

அத்தியாவசிய சேவைகளாக பெயரிடப்பட்டுள்ள அரச சேவைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட்டால், அவர்களுக்கெதிராக சட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

கடந்த வாரமும் நாட்டில் பாடசாலைகள் உட்பட அனைத்துத் துறைகளும் ஸ்தம்பிதமடையும், ஆஸ்பத்திரிகள் செயலிழக்கும், பஸ் சேவைகள், ரயில் சேவைகள் நிறுத்தப்படும் எனத் தெரிவித்து, மார்ச்சில் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர்.

எனினும் அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை. நாடு பெரும் நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு வருகிறது. 12 மணிநேர மின்துண்டிப்பு இடம்பெற்றது. தற்போது அது முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. பல நாட்களாக தமது வாகனத்துக்கு எரிபொருள் பெற்றுக்கொள்ள மக்கள் வரிசையில் நின்றனர்.

அவ்வாறு வரிசையில் நின்று மக்கள் மரணமடைந்த நிகழ்வுகளும் இடம்பெற்றன. தற்போது நிலைமை மாற்றமடைந்து எந்தவித வரிசையுமில்லாமல் எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடிகிறது. சமையல் எரிவாயுவுக்காக  அலைந்த நிலை மாற்றமடைந்துள்ளது. இதுவும் இப்போது இல்லை. பெரும் சவால்களுக்கு மத்தியில் ஜனாதிபதி நாட்டைப் பொறுப்பேற்று படிப்படியாக நிலைமைகளை நிவர்த்தி செய்து வருகின்றார்.

சிறந்த பயணம் ஒன்றுக்கான அடித்தளங்கள் போடப்பட்டு வருகின்றன. கடந்த (20) சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை கூடி இலங்கைக்கு உதவுவது

தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. எமக்கான அனுமதியை பெற்றுக்கொடுப்பதற்கு அவர்கள் தயாராக உள்ளனர்.

இவற்றை, சீர்குலைப்பதற்கு இடமளிக்க முடியாது. அதனால்தான் மக்களின் இயல்பு வாழ்க்கை, பிள்ளைகளின் பாடசாலைக் கல்வி, அன்றாட அலுவல்களை மேற்கொள்வோர், கூலி வேலைகளில் ஈடுபடுவோர் மற்றும் சுய தொழில்களில் ஈடுபடுவோர் ஆகிய அனைத்துத் தரப்பினரின் நலன்களைக் கருதி அரச சேவையை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அரச சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் போக்குவரத்து, துறைமுகம், விமான நிலையம், தபால், மின்சாரம் ஆகிய அனைத்தும் அத்தியாவசிய சேவைகளாக பிரகனடப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகையில் அதனை மீறி செயற்பட்டால் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படும் என்பதை, மீறி செயற்பட்ட பின்னரே புரிந்துகொள்ள முடியும்.

சட்டத்தை முறையாக செயற்படுத்துவதற்காகவே வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 03/15/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை