2023 இறுதிக்குள் டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி ரூ. 390 ஆக வாய்ப்பு!

Rizwan Segu Mohideen

- நேற்று உலகின் வேகமாக வளர்ச்சியுற்ற நாணயமாக இலங்கை ரூபா பதிவு
- ஆயினும் 1/5 ஆக வீழ்ச்சியடையுமென Fitch நிறுவனம் தெரிவிப்பு

இவ்வருட இறுதிக்குள் இலங்கை ரூபாவானது டொலருக்கு நிகரான பெறுமதியில் ஐந்தில் ஒரு பங்கை இழந்து ரூ. 390 ஆக வீழ்ச்சியடையும் சாத்தியம் காணப்படுவதாக, ஃபிட்ச் நிறுவனம் (Fitch Solutions) எதிர்வுகூறியுள்ளது.

Fitch Solutions ஆனது, நிதியியல் ரீதியான தரவு, ஆராய்ச்சி மற்றும் உலகளாவிய சந்தைகள் மற்றும் பொருளாதார சூழல் பகுப்பாய்வுகளுடன் கடன் ஆபத்து மற்றும் மூலோபாய தரவுகளை வழங்கும் நிறுவனமாகும்.

இந்நிறுவனமே குறித்த எதிர்வுகூறலை வெளியிட்டுள்ளது. அது மேலும் தெரிவித்துள்ளதாவது,

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒப்பந்தம் செய்து கொள்ளும் என்ற நம்பிக்கையில், கடந்த இரண்டு வாரங்களில் மிக வேகமாக பெறுமதி உயர்வடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி, இவ்வருட (2023) இறுதியில் மீண்டும் சரியக்கூடுமெனவும் அதன் பெறுமதியில் ஐந்தில் ஒரு பகுதியால் அது பெறுமதி இழக்க வாய்ப்புள்ளது எனவும் Fitch Solutions தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் கொள்வனவு பெறுமதி நேற்றையதினம் (08) 3 சதவீதம் அதிகரித்து 313.7749 ஆக பதிவாகியிருந்தது. இது அதன் வருடாந்த உயர்வின் 15 சதவீதமாகும். அந்த வகையில் இவ்வருடத்தில் இதுவரை உலகின் மிகச் சிறப்பாக செயல்படும் நாணயமாக இலங்கை ரூபா பதிவாகியுள்ளது.

இதேவேளை, Fitch Solutions அதன் தரவுகள் மூலமான எதிர்வுகூறலின் அடிப்படையில், இவ்வருட இறுதிக்குள் ரூபாவின் பெறுமதி டொலருக்கு நிகராக ரூ. 390 ஆகக் குறையுமென குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இலங்கை இவ்வருடத்தின் 2ஆம் காலாண்டுக்குள் IMF இன் நிதி வசதியளிப்பு பொதியைப் பெறுமென Fitch நம்பிக்கை வெளியிட்டுள்ளதோடு, எதிர்காலத்தில் தடங்கல்கள் எழும் சாத்தியமும் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள IMF நிறைவேற்றுக் குழு அனுமதிக்குப் பின்னர் இடையூறுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், பலவீனமான பொருளாதாரம் மற்றும் இழுபறியான உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கு மத்தியில் IMF திட்டத்தைப் பின்பற்றுவது சவாலாக இருக்குமென, Bloomberg நிதி மற்றும் வர்த்தக செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி Fitch நாடுகள் தொடர்பான இடர் ஆய்வாளர் Seah Wang Ting குறிப்பிட்டுள்ளார்.

IMF நிதி வசதியை பெறும் பொருட்டு, இலங்கை, வரிகளை அதிகரித்து, மின்சக்தி மானியங்களை குறைத்துள்ளதோடு, பிரதான கடன் வழங்குனர்களின் நிதி உறுதிப்பாட்டையும் பெற்றுள்ளது. அதற்கமைய சுமார் 70% இலிருந்து குறைந்துள்ள பணவீக்கம் அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக மத்திய வங்கி சமீபத்தில் கொள்கை வட்டிவீதங்களையும் உயர்த்தியது. இது தொடர்பில் IMF இன் பாராட்டையும் பெற்றிருந்தது.

இலங்கை பாரிய வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் தேவைகளைக் கொண்டுள்ளதோடு, எதிர்வரும் மாதங்களில் அதன் வெளிநாட்டு கையிருப்பையும் கட்டியெழுப்ப வேண்டிய தேவையில் உள்ளது. இது நாணயமாற்று விகிதத்தில் எதிர்மறையான அழுத்தத்தை ஏற்படுத்துமென, Fitch நேற்றையதினம் (08) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, 2029 வரை வருடாந்தம் 6 - 7 பில். டொலர் வெளிநாட்டுக் கடன்களை செலுத்த வேண்டியுள்ளதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்தசெவ்வாய்க்கிழமை (07) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்ததை Fitch நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, உலகளாவிய நாணய நிலைமைகளை இறுக்கமடையச் செய்வதன் மூலம் இலங்கை ரூபாவுக்கு அழுத்தம் ஏற்படலாம் என Fitch குறிப்பிட்டுள்ளது. கடன்களுக்கான வட்டி விகிதங்களின் இறுதி நிலையானது, முன்பு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்குமென பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோமி பவல் கடந்த செவ்வாயன்று செனட் வங்கிக் குழுவிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thu, 03/09/2023 - 10:28


copied Thinakaran.lk

கருத்துரையிடுக

புதியது பழையவை