தாழமுக்கம் வலுவிழப்பு; வானிலை தாக்கம் இன்று மாலை முதல் குறைவடையும்

- கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம்; கரைக்கு திரும்பவும்

நாட்டின் தெற்கு பகுதியில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் பிரதேசம் இலங்கை கடற்பரப்பிலிருந்து விலகிச் செல்வதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இத்தொகுதி நாட்டை விட்டு விலகிச் செல்வதன் காரணமாக, இலங்கையின் வானிலையில் இதன் தாக்கம் இன்று மாலையிலிருந்து குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கடற்றொழிலில் ஈடபடவேண்டாம்
மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழமான மற்றம் ஆழமற்ற கடற்பரப்புகளில் மற்றம் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்குள் (06N - 09N, 78E – 81E) மறு அறிவித்தல் வரை பயணிக்க வேண்டாமென மீனவ மற்றம் கடற்றொழிலில் ஈடுபடுவோர் மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டமென அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேற்குறிப்பிட்ட கடல் பகுதிகளில் இருப்பவர்கள் உடனடியாக கரையோரங்களுக்கு திரும்பவும் அல்லது பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகளுக்கு மீனவ மற்றும் கடற்படை சமூகம் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

நாளைய வானிலை
நாளைய தினத்தில் (27) வடக்கு, வடக்கு-மத்திய, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவு நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.

Mon, 12/26/2022 - 12:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை