‘எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்’ கேப்பாபிலவில் மக்கள் ஆர்ப்பாட்டம்

  • 2008 இல் வெளியேறியும் காணிகள் இன்னும் கிடைக்கவில்லையென தெரிவிப்பு

தமது பூர்வீக காணிகளிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டுமெனக் கோரி, கேப்பாபிலவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நேற்று செவ்வாய்க்கிழமை (27) நடத்தினர். கேப்பாபிலவு பகுதியிலமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட படைத்தலைமையக நுழைவாயில் முன்னால், இவர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்காக தமிழ் கட்சிகள் ஜனாதிபதியுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர்களும் இதில்,பங்கேற்றனர். இந்த போராட்டத்தின் போது காணி உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,

2008 ஆம் ஆண்டு போர் காரணமாக கேப்பா பிலவு பூர்வீக நிலங்களை விட்டு வெளியேறினோம். இன்றுவரை எங்களின் வளங்கள் நிறைந்த காணிகளை படையினர் ஒப்படைக்கவில்லை. அந்நிலத்திலிருந்து கிடைக்கும் வருமானங்களையும் படையினர் எடுத்துவருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் விவசாயம், கால்நடைவளர்ப்பு, கடற்தொழிலை நம்பியே நாங்கள் வாழ்ந்துவருகிறோம். காணிகள் இல்லாத நிலையில் எங்களால் எதுவும் செய்யமுடியாது. மாறி, மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் காணிவிடுவிப்பு தொடர்பில் பேச்சுக்கள் நடாத்தும்.ஆனால், எதுவும் நடந்ததாக இல்லை. எனவே எங்கள் காணிகளை விட்டு இராணுவத்தினர் வெளியேறவேண்டும். எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

Wed, 12/28/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை