அமெரிக்காவில் பனிப்புயல்; உயிரிழப்பு 56 ஆக அதிகரிப்பு

அமெரிக்காவில் நீடிக்கும் பனிப்புயலால் நியூயோர்க் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அங்குள்ள பபல்லோ நகரம் முழுமையாக பனியால் மூடப்பட்டுள்ளது.

கனடா முதல் மெக்சிகோ எல்லை வரையிலும் நீடிக்கும் பனிப்புயலுக்கு இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 28 பேர் அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

குறிப்பாக, பபல்லோ நகரை பனி மூடியதால் கடுங்குளிரில் உறைந்து இறந்து போனவர்கள் அதிகம். சிலர் கார்களில் இருந்தபடியே மரணத்தைத் தழுவியுள்ளனர்.

பபல்லோ நகரில் பனிப்பொழிவு இடைவிடாமல் தொடர்வதால் பல வீடுகள் பனி மூடிக் காணப்படுகின்றன. வீதிகள் பனி மூடிக் கிடப்பதால் மீட்புப் பணியை முழு வீச்சில் தொடர முடியவில்லை.

தொலைதூர இடங்களை மீட்பு வாகனங்களோ, மருத்துவ அவசரப் பணியில் உள்ள வாகனங்களோ நெருங்க முடியவில்லை.

உலகெங்கும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்த கடந்த ஞாயிறன்று (25), அமெரிக்காவில் பனிப்பொழிவால் பயணத்தை தொடர முடியாமல் வீதியோரம் ஆங்காங்கே பலரும் குடும்பத்துடன் காருக்குள்ளேயே முடங்கிக் கிடந்துள்ளனர். நியூயோர்க்கின் பபல்லோ நகரில் மட்டும் சுமார் 4 அடிக்கு மேல் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. வீதிகளில் கார்கள் ஆங்காங்கே கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

அமெரிக்காவின் மேற்கு மாநிலமான மொன்டனா குளிரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வெப்பநிலை மைனஸ் 45 பாகை என்னும் அளவுக்கு சரிந்துள்ளது.

அமெரிக்காவில் மூன்றில் இரு பங்கு விமானச் சேவைகள் பனிப்புயலால் அல்லது ஊழியர் பிரச்சினைகளால் ஒத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்ற பனிப்புயல் வீசியதில்லை என்று கூறப்படுகிறது.

Wed, 12/28/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை