விடைபெற்றார் மகாராணி

நூற்றுக்கணக்கான அரச தலைவர்கள் மற்றும் அரசர்கள் உட்பட இரண்டாயிரம் பிரமுகர்களுடன் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் இடம்பெற்றதைத் தொடர்ந்து நேற்று மாலை அவரது பூதவுடல் வின்ட்சோர் கோட்டையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பிரிட்டன் வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாக இடம்பெற்ற மகாராணியின் இறுதிச் சடங்கில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜப்பான் பேரரசர் நருஹிடோ மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மக்ரோன் என 2000 பிரமுகர்கள் பங்கேற்றனர். இதனை ஒட்டி நாடு முழுவதிலும் இருந்து 10,000 பொலிஸார் லண்டன் நகரில் நிறுத்தப்பட்டதோடு இலட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்.

மகாராணியின் பூதவுடல் வைக்கப்பட்ட பேழை மதச் சடங்குகளுக்காக நேற்று மாலை வின்ட்சோர் தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து தனிப்பட்ட இறுதிக் கிரியைக்குப் பின் மகாராணியின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

70 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இரண்டாம் எலிசபெத் மகாராண கடந்த செப்டெம்பர் 8 ஆம் திகதி ஸ்கொட்லாந்தில் உள்ள பல்மோரல் கோட்டையில் தனது 96 ஆவது வயதில் காலமானார். தொடர்ந்து பத்து நாள் துக்கதினத்திற்கு பின்னரே அவரது இறுதிச் சடங்கு நேற்று இடம்பெற்றது. இதனையொட்டி நேற்று பிரிட்டனில் பொது விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

Tue, 09/20/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை