எண்ணெய் கொள்வனவு குறித்து ரஷ்யாவுடன் தொடர் பேச்சுக்கள்

"ஸ்புட்னிக்" பத்திரிகைக்குவழங்கிய பேட்டியில் −அமைச்சர் பந்துல

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை கொள்முதல் செய்வதற்கான கடனை பெற்றுக் கொள்வது தொடர்பில் இலங்கை அதிகாரிகள் ரஷ்யாவுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக போக்குவரத்து,பெருந்தெருக்கள் அமைச்சர் மற்றும் ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன, ஸ்புட்னிக் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.  

இலங்கை பொருளாதார மற்றும் அந்நிய செலாவணி பிரச்சினையிலிருந்து மெல்ல மெல்ல வழமைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் ரஷ்யாவிடமிருந்து பெரும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் கடன் பெற்றுக் கொள்வதற்காக நடைபெறும் கலந்துரையாடல்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பந்துல குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார். 

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய்யை கொள்முதல் செய்வதற்கும் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினைக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கும் இலங்கைக்கு கடன் பெற்றுக்கொள்வது தொடர்பாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷ, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினிடம் வேண்டுகோள் விடுத்திருந்ததாகவும் அமைச்சர் அங்கு தெரிவித்தார்.  

எம்.ஐ.ஆர் என அழைக்கப்படும் ரஷ்யாவின் கொடுப்பனவு தொகுதியுடன் தொடர்பை ஏற்படுத்தக் கூடிய திறன் தொடர்பாக இலங்கை அதிகாரிகள் ரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் இரண்டு நாடுகளின் மத்திய வங்கிகளுக்கு மிடையேயும் இது தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெறுவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன பேட்டியின் போது தெரிவித்தார்.  

ரஷ்யாவுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பொருளாதார தடை காரணமாக மாஸ்டர் மற்றும் விஸா அட்டைகளை ரஷ்யர்களுக்கு பயன்படுத்த முடியாத நிலைமை தோன்றியுள்ளது. ரஷ்ய கொடுப்பனவு தொகுதியுடன் இணையும் போது இலங்கைக்கு வருகை தரும் ரஷ்ய உல்லாச பயணிகளுக்கு ரஷ்யாவின் கடனட்டை மற்றும் பற்று அட்டைகளை பயன்படுத்த சந்தர்ப்பம் கிடைப்பதால் அவர்களுக்கு அது இலகுவாக அமையுமெனவும் மத்திய வங்கியின் அனுமதி கிடைத்த பின்னர் இது பற்றி அறிவிக்கவுள்ளதாகவும் அவர் அங்கு தெரிவித்தார். 

Tue, 09/20/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை