பிரதமர் பதவிக்கு தமிழ் அல்லது முஸ்லிம் ஒருவரை நியமிக்க வேண்டும்

மனநிலையை மாற்ற வேண்டும் என்கிறார் ரமேஷ் பத்திரண

சமூக கட்டமைப்பில் மாற்றம் ஏற்படும் போதே நாடு முன்னேற்றமடையும் என்றும் நாட்டின் பிரதமர் பதவிக்கு தமிழ்அல்லது முஸ்லிம் ஒருவர் தெரிவு செய்யப்படுவதை மன மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எனினும் அத்தகைய மனநிலை இன்னும் எமது சமூகத்தில் ஏற்படவில்லை என அமைச்சர் ரமேஷ் பத்திரண பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இனவாதமற்ற சமூகம் தோற்றம் பெற்றால் மாத்திரமே நாடு என்ற ரீதியில் நாம் முன்னேற்றமடைய முடியும் என தெரிவித்த அமைச்சர் நாட்டின் முன்னேற்றத்திற்கு நாட்டு மக்களின் பூரண ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்:

மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினார். கடந்த இரண்டரை வருட காலப்பகுதியில் அவர் நாட்டுக்காக சிறந்த பல வேலை திட்டங்களை நடைமுறைப்படுத்தியி ருந்தாலும் கொரோனா பெருந்தொற்று பாதிப்புகள் மற்றும் தூரநோக்கற்ற பொருளாதார கொள்கை ஆகிய விடயங்களே பாதகமாக அமைந்து அவர்

பதவி விலக நேரிட்டது.

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தினால் செயற்படுத்த முடியாத செயற்பாடுகளை மக்களின் எதிர்பார்ப்பிற்கமைய செயற்படுத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு உள்ளது.

பாராளுமன்றத்தினதும் மக்களினதும் நம்பிக்கையினை வென்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னோக்கி செல்வார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கிணங்க அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படவுள்ளது.

பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் எதிர்பார்த்த வகையில் அமையாவிடினும் அதனை செயல்படுத்துவதன் மூலம் சவால்களை வெற்றிக்கொள்ள வேண்டியுள்ளது.

1948ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரசியல்,சமூக கட்டமைப்பு காலத்திற்கு காலம் மாற்றமடைந்துள்ளது. ஆட்சியிலிருந்த அரச தலைவர்கள் அனைவருமே நாட்டுக்கு நன்மை பயக்கும் சிறந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளனர். அனைத்து தலைவர்களும் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பல்லின சமூகம் வாழும் நாடு என்ற ரீதியில் இனவாத முரண்பாடுகளுக்கு மத்தியில் பல சிறந்த திட்டங்கள் காலத்துக்கு காலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளன. பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்த ஒருசில தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடியினை தீவிரப்படுத்தியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பொருளாதார மீட்சிக்காக அரச சேவை மறுசீரமைக்கப்பட வேண்டும்.

எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் தீர்மானங்கள் பிரபலமற்றதாக அமைந்தாலும்,பொருளாதார மீட்சிக்கு ஏற்புடையதாக அமையும் என்பது எமது நம்பிக்கை.

இனவாதமற்ற சமூகத்தை தோற்றுவிக்க வேண்டுமாயின் குறைந்தபட்சம் பிரதமர் பதவிக்கு தமிழ்,முஸ்லிம் சமூகத்திலிருந்து ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும். அதனை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலை அவசியம்.

சமூக கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே நாடு முன்னேற்றமடையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்,

Sat, 08/13/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை