சுயலாபத்தை கைவிட்டு கனிந்துள்ள சூழலை சாதகமாக பயன்படுத்துங்கள்

தமிழ்க்கட்சித் தலைமைகளுக்கு டக்ளஸ் மீண்டும் அழைப்பு

சுயலாபம் இல்லாது அறிவார்ந்து சிந்தித்து கனிந்துள்ள சூழலை சரிவரப் பயன்படுத்துமாறு தமிழ் அரசியல் தலைமைகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பாக பாராளுமன்றத்தில் (12) விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடு முழுவதும் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டு வரும் எரிபொருள் பிரச்சினையை தீர்ப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இன்றைய கால கட்டத்தில், இன்னும் சில தினங்களில் இவ் விவகாரத்துக்கு தீர்வை வழங்க முடியுமெனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

"இருண்டிருந்த ஒரு யுகத்தில், அதை சபித்துக் கொண்டிராமல், ஒரேயோரு விளக்காக இருந்து, இந்த நாட்டுக்கே ஒளி தருவதற்கு முன்வந்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பதை யாவரும் அறிவோம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்த நாடு முகம் கொடுத்திருந்த நெருக்கடி நிலைமையில், இந்த அரசுக்கெதிராக எழுந்திருந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், இந்த நாட்டின் பிரதமர் பதவியை பொறுப்பேற்பதற்கு முன்வருமாறு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்திருந்தார். ஆசையிருந்தும், அச்சம் காரணமாக பலரும் பின்வாங்கியும், நிபந்தனைகளை விடுத்தும், தப்பித்தும் கொண்டும் இருந்தபோது, இந்த சவாலை தைரியமாக ஏற்று முன்வந்தவர் ரணில் விக்கிரமசிங்க.

எந்தவொரு விடயம் குறித்தும் நடைமுறைச் சாத்தியமாக சிந்தித்து, முடிவெடுக்கும் நாம், இந்த நாட்டின் சவால்கள் மிகுந்த இக்காலகட்டத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆற்றல் குறித்து திடமான நம்பிக்கைக் கொண்டிருந்தோம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசியல் சதி காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்யவிருந்த நிலையில், பதில் ஜனாதிபதியாகவும் இடைக்கால ஜனாதிபதியாகவும் பொறுப்பேற்று எமது நாடு முகம்கொடுத்து வருகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வைத் தேடித் தரக் கூடியவர் ரணில் விக்கிரமசிங்கவே என்ற உறுதியான நம்பிக்கை எம்மிடம் இருந்ததால், எமது ஆதரவை பகிரங்கமாகவே அவருக்கு வழங்க முன்வந்திருந்தோம்.

‘சுயலாபம் கருதி பொது நோக்கை வெறுத்து அலையும் கூட்டம் அல்ல நாம். பொது நோக்கு கருதி சுயலாபங்களை வெறுக்கும் நாட்டம் கொண்டவர்கள் நாம்.'நாம் வெல்லும் பக்கம் நிற்பவர்கள் அல்ல' நிற்கும் பக்கத்தின் வெற்றிக்காக நாம் உழைப்பவர்கள் . அவரை இவரை நம்புவது என்பதற்கு அப்பால் கனிந்து வந்திருக்கும் சூழலை சரிவர பயன்படுத்தி எமது இலக்கை நாமே எட்டிவிட எம்மை நாமே முழுமையாக நம்புகிறோம்.

பாராளுமன்றத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெல்வாரா? இல்லையா? என்பதற்கு அப்பால் எமது தேசத்தின் இன்றைய பொருளாதார சவால்களை அவரே வெல்வார் என்றே அவரை நாம் அரசியல் துணிச்சலோடு ஆதரித்தோம். நாம் விரும்பியது போல் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதியாக சிம்மாசனம் ஏறியிருக்கின்றார்.

தனது சிம்மாசன உரையில் அவர் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண சர்வகட்சி அரசுக்கான அழைப்பை விடுத்துள்ளார். இது ஒரு அரிய வாய்ப்பு. சகல தரப்புடனும் இணைந்து சக தமிழ் தரப்பும் இதை சரிவரப்பயன்படுத்த முன்வரவேண்டும்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் தொடக்கம், அதை ஏற்றவர்கள், ஏற்காதவர்கள் உட்பட வரலாறெங்கும் இதுவரை காலம் எமக்கு கிடைத்த அறிய வாய்ப்புகள் யாவும் பன்றிகளுக்கு முன்னாள் போடப்பட்ட முத்தாகவே கடந்து போய் விட்டன . இன்று கனிந்துள்ள அரிய வாய்ப்பையாவது சுயலாபம் அற்று அறிவார்ந்து சிந்தித்து சரிவர பயன்படுத்த முன்வருமாறு சக தமிழ் தரப்பினருக்கு மீண்டும் நான் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Sat, 08/13/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை