பத்து ரயில் பெட்டிகள் கவனிப்பாரற்ற நிலையில்!

சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட பலகோடி ரூபா பெறுமதியான

உடனடி விசாரணைகளை நடத்த அமைச்சர் பந்துல பணிப்பு

2009 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் தருவிக்கப்பட்டதாக தகவல்; புத்தளம் ரயில் நிலையத்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது

சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட பல கோடி ரூபா பெறுமதியான 10 ரயில் பெட்டிகள் புத்தளம் புகையிரத நிலையத்துக்கருகில் கவனிப்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பல கோடி ரூபா பெறுமதியான 10 ரயில் பெட்டிகள் புத்தளம் புகையிரத நிலையத்துக்கருகில் கவனிப்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. இது தொடர்பாகவே அமைச்சர் பந்துல இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த 2009 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் சீனாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளே இவ்வாறு புத்தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் புத்தளம் ரயில் நிலையத்துக்கு இந்த பெட்டிகள் கொண்டுவரப்பட்டு போடப்பட்டுள்ளதை இன்றும் காணக்கூடியதாகவுள்ளது. அப்போதைய போக்குவரத்து அமைச்சராக இருந்த டலஸ் அழகப்பெருமவின் பணிப்புக்கமைய 2009,2010 ஆம் ஆண்டுகளில் இந்த சீன ரயில் பெட்டிகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டன.

இந்த ரயில் பெட்டிகள் தொடர்பான செய்தி தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பான அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமைச்சரிடம் கையளிக்க வேண்டுமென்றும் அமைச்சர் கோரியுள்ளார். அடுத்த சில நாட்களில் உரிய அதிகாரிகளுடன் புத்தளம் சென்று இந்த ரயில் பெட்டிகளை நேரில் கண்காணிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த ரயில் பெட்டிகளை அவதானித்து சேவையில் இணைக்க முடியுமா என்பதை கண்டறிந்து அதற்கேற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொழிற்சங்கங்கள் மேலும் தெரிவிக்கையில்,

அந்தக் காலப்பகுதியில் ரயில்வே திணைக்களம் 100 சீன ரயில் பெட்டிகளை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளன.

இந்த ரயில் பெட்டிகள் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்னரே, சீன ரயில் பெட்டிகளின் பிரேக்கிங் சிஸ்டம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து, அப்போதைய போக்குவரத்து அமைச்சராக இருந்த டலஸ் அழகப்பெருமவிடம், ரயில்வே தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக ரயில்வே தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

ஆனால், இவ்வாறு கொண்டு வரப்பட்ட 100 சீன ரயில் பெட்டிகளில் குறைந்த எண்ணிக்கையிலான ரயில் பெட்டிகள் இயக்கப்பட்டு வந்ததுடன், அதிக எண்ணிக்கையிலான ரயில் பெட்டிகள் இயக்கப்படாமல், நாட்டுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.

ரயில் பெட்டிகள் இவ்வாறு அகற்றப்பட்டதன் மூலம் பயணிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதுடன், நாட்டுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்படுவதற்கு அனைத்து துறையினரும் காரணம் எனவும் தெரிவிக்கின்றனர்.

புத்தளத்தில் கவனிப்பாரற்ற போடப்பட்டிருக்கும் ரயில் பெட்டிகளுள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ள சீன ரயில் பெட்டிகளில் முன்பதிவு செய்யப்பட்ட ஆசனங்களுடன் கூடிய இரண்டாம் தரப் பெட்டிகள் இரண்டு இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

இந்த இரண்டு பெட்டிகள் உட்பட ஏனைய அனைத்து பெட்டிகளும் தற்போது மிக உயர்ந்த நிலையில் காணப்படுவதாகவும், இவற்றை அகற்றுவது நாட்டின் பணத்தை வீணடிக்கும் செயலாகுமெனவும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

 

Fri, 08/12/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை