மரியுபோலின் ஆலையில் மீட்பு நடவடிக்கை நீடிப்பு

ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்

உக்ரைனில் மரியுபோல் துறைமுக நகரின் பழமையான உருக்கு ஆலையில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. அங்கு நிலைமை மோசமாய் இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

மரியுபோல் நகரில் ரஷ்யப் படையெடுப்புக்கு எதிராக நிற்கும் கடைசிக் கோட்டையாக சோவியட் காலத்தில் கட்டப்பட்ட அந்த உருக்கு ஆலை கருதப்படுகிறது.

அதில் உக்ரைனிய வீரர்களும் பொதுமக்களில் சுமார் 200 பேரும் இருப்பதாக நம்பப்படுகிறது. ரஷ்யப் படை அந்த ஆலையைச் சுற்றி வளைத்துள்ளது.

உணவு மற்றும் குடிநீர் தீர்ந்து வரும் நிலையில் உருக்காலையில் சிக்கியிருக்கும் பொதுமக்களில் சுமார் 20 சிறுவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆலையில் நிலைமை நரகம் போல் இருப்பதாக ஐ.நா தலைவர் அன்ட்டோனியோ குட்டெரெஸ் பாதுகாப்பு சபையில் கூறினார்.

ஐ.நா மற்றும் செஞ்சிலுவைச் சங்கமும் கடந்த வாரத்தில் அங்கிருந்து சுமார் 500 பேரை மீட்டன.

பொதுமக்கள் வெளியேற வகை செய்யும் விதத்தில் 3 நாள் போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.

இருப்பினும் ரஷ்யத் தாக்குதல் தொடர்வதாக உக்ரைனிய வீரர்கள் கூறுகின்றனர்.

எனினும் உக்ரைனிய படையினர் சரணடைந்தல் பொதுமக்கள் வெளியேறுவதற்கான பாதுகாப்பான வழியை திறக்க தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார்.

புட்டி ஏற்கனவே மரியுபோல் நகரில் வெற்றியை அறிவித்ததோடு அங்குள்ள உருக்காலையை முற்றுகையிட ரஷ்ய படையினருக்கு உத்தரவிட்டார். இந்த உருக்காலை பனிப்போர் காலத்தில் அணு குண்டு தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் நிலவறையாகவும் நிலத்துக்கடியில் ஆழமான சுரங்கப்பாதைகளைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மரியபோல் நகரில் உள்ள அஸோவ்ஸ்டல் உருக்கு ஆலைக்குள் சிக்கியுள்ள உக்ரைனிய இராணுவ வீரர்களை கூண்டோடு அழிக்க ரஷ்யா முற்பட்டுள்ளதாக உக்ரைனிய இராணுவம் கூறுகிறது.

ஆலைக்குள் நிலைமை மிகவும் பயங்கரமாக இருப்பதாக அதிலிருந்து ஒருவழிக வெளியேறிய சிலர் ஊடகத்திடம் தெரிவித்தனர்.

பல நாட்களாக இருளில் மூழ்கி, சுயாசிக்க போதிய காற்று இல்லாமல் பலர் வாடுவதாக தெரிவிக்கப்பட்டது. ரஷ்யப் போர் விமானங்களின் சத்தம் ஆலைக்குள் இருக்கும் சிறாரைக் குலைநடுங்க வைப்பதாக அங்கிருந்து தப்பிய பெண் ஒருவர் கூறினார்.

Sat, 05/07/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை