நாடளாவிய ரீதியில் பொது நிர்வாக பணிகள் பல முடக்கம்

கொழும்பு உட்பட நாடளாவிய ரீதியில் மக்களுக்கு பெரும் அசௌகரியம்

நாட்டில் நேற்று சில தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் காரணமாக நாடளாவிய ரீதியில் நிர்வாக பணிகள் முடங்கின. இதன்காரணமாக மக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது.

போக்குவரத்து, சுகாதாரத்துறை, அத்தியாவசிய பொருள் விநியோகம் ஆகியவற்றில் ஏற்பட்ட தடையால் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

அரசாங்கம் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் மற்றும் பல அமைப்புக்கள் நேற்று முன்னெடுத்த பொது நிர்வாக முடக்கல் போராட்டம் காரணமாக பலதுறைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்தன.

புறக்கோட்டை உள்ளிட்ட நாட்டின் பல பிரதான நகரங்கள் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதுடன் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்ததை காணக்கிடைத்தது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் இந்த நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவு வெளியிட்டு தமது சேவையை நிறுத்தியிருந்தனர். எனினும்இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துக்கள் மாத்திரம் சேவையில் ஈடுபட்டன.

ஆசிரியர், அதிபர்கள் நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளதன் காரணமாக பல பாடசாலைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்தன.

நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்படும் பொது நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதவளித்து நாட்டின் பல பாகங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பல வீதிகள் மூடப்பட்டன. சில வீதிகளில் வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்ததால் அத்தியாவசிய மற்றும் இதர தேவைகளுக்காக பயணிப்போர் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்தனர்.

நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஆசிரியர், அஞ்சல், சுகாதாரம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ராஜகிரிய சுற்றுவட்டத்தில் பேரணியை ஆரம்பித்திருந்தனர்.இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் நான்கு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை வங்கி சேவையாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் நேற்று முற்பகல் மத்திய வங்கிக்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விவசாய உற்பத்தி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்தன. நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக இந்த செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதாக விவசாய ஆலோசகர் தொழிற்சங்கம் தெரிவித்தது.

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, கண்டி, புஸ்ல்லாவை, நுவரெலியா, பதுளை மற்றும் ஹற்றன் ஆகிய நகரங்களில் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்ததாக எமது பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

நுவரெலியா நகர் பகுதிகளில் பெருந்தோட்ட மக்களும் தமது எதிர்ப்பை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஹர்த்தாலால் களையிழந்த யாழ் மாவட்டம்!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஹர்தால்லால் யாழ்.நகரில் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டிருந்தன. எனினும் இ.போ.ச பேருந்து சேவைகள் இடம்பெற்றபோதும் தனியார் சேவைகள் இயங்காதிருந்தது.

இதனால் நகர வீதிகள் வெறிச்சோடி இருந்ததுடன் வங்கிகள் பூட்டப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது. இதேபோல் வடக்கு மாகாணங்களின் முக்கிய பெருநகரங்கள் சோபையிழந்து காணப்பட்ட போதும் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

முற்றாக முடங்கிய மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டு நகர்,களுவாஞ்சிகுடி நகர்பகுதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும். பொதுச்சந்தை தனியார் மற்றும், அரச வங்கிகள் அனைத்தும் முற்றாக பூட்டப்பட்டிருந்தன. பாடசாலைகளும் இயங்கவில்லை.

 

Sat, 05/07/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை