கொரோனாவால் உலகில் 500 பேரில் ஒருவர் மரணம்

உலக சுகாதார அமைப்பு தகவல்

கொரோனா வைரஸ் தொற்றால் முதல் 2 ஆண்டுகளில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை, உத்தியோகபூர்வ எண்ணிக்கையைவிட மும்மடங்கு அதிகம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

2020, 2021 ஆகிய ஆண்டுகளில் சுமார் 14.9 மில்லியன் பேர் உயிரிழந்திருப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அந்த எண்ணிக்கை 6 மில்லியனுக்கும் மேல் என்று அமெரிக்காவிலுள்ள ஜோன்ஸ் ஹொப்கின்ஸன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள உயிரிழப்பு எண்ணிக்கை கூடுதலான மரணங்களையும் சேர்த்துக்கொண்டுள்ளது.

வைரஸ் பரவல் காலத்திலும் அதற்கு முந்திய ஆண்டுகளிலும் ஏற்பட்ட மரணங்களை அமைப்பு ஒப்பிடுகிறது.

அதன்படி, வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்கள் மட்டுமல்லாமல், வைரஸ் பரவலின் மறைமுக விளைவாக உயிரிழந்தோரின் எண்ணிக்கையையும் கருத்தில் எடுத்துக்கொள்கிறது.

உதாரணத்திற்கு, வைரஸ் பரவல் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிந்ததால், பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருத்துவச் சிகிச்சைப் பெற முடியாமல் உயிரிழந்தவர்களும் அந்த எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டனர்.

80 வீதத்துக்கும் அதிகமான மரணங்கள் தென்கிழக்காசியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றில் பதிவானதாக உலக சுகாதார அமைப்பும் கூறுகிறது.

குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் அந்த எண்ணிக்கை 50 வீதத்துக்கும் அதிகம். சுமார் 70 வீதமான மரணங்கள் 10 நாடுகளில் மட்டுமே பதிவாகின. அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகியவை அவற்றில் அடங்கும்.

கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 4.7 மில்லியன் பேர் மரணித்ததாக உலகச் சுகாதார அமைப்பு கூறுகிறது. அந்த எண்ணிக்கை 481,000 என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கணிப்புக்கு எப்போதும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய இந்தியா, நாட்டின் அக்கறைகளை அது அவ்வளவாகக் கருத்தில் கொள்ளவில்லை என்று குற்றஞ்சாட்டியது.

உயிரிழந்தோர் எண்ணிக்கையைக் கணிக்க, மற்ற நாடுகளைப் போன்று இந்தியாவுக்கும் ஒரே அணுகுமுறையைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கமாட்டாது.

1.3 பில்லியன் பேர் கொண்ட இந்தியாவின் மக்கள்தொகை, வேற்றுமைகள் முதலியவற்றைக் கருத்தில்கொள்ள வேண்டும் என்று இந்திய அரசாங்கம் கூறியது.

கொவிட்–19 வைரஸ் தொற்றால் உலகளவில் 500 பேரில் ஒருவர் மரணித்தாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

Sun, 05/08/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை