நெருக்கடிக்கு தீர்வுகாண்பதற்கு ஒன்றிணைந்த கலந்துரையாடல்

அனைத்து கட்சிகளுக்கும் - ரணில் MP அழைப்பு

 நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வுகாண அனைவரும் இணைந்து கலந்துரையாடவேண்டும். பிளவுகளை விட ஒன்றிணைந்து செயற்படுவதே இன்றைய முக்கிய தேவையாக உள்ளதென தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வரவு – செலவு திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தேவையற்ற செலவுகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவது அவசியம் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (04) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்

தொடர்பில் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாடு பாரிய பிரச்சினைக்கு ஆளாகி இருக்கும் நிலையில் இடைக்கால அரசாங்கமா அல்லது தனியான அரசாங்கத்தை அமைப்பதா என்பது தொடர்பிலும் ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என்றும் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. எனினும் இத்தகைய சூழ்நிலையில் தேவையற்ற செலவுகள் நிறுத்தப்பட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வீழ்ச்சி அடையாமல் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஸ்ரீலங்கன் விமான சேவை 25 எயார் பஸ்கள் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் தொடர்பில் பேசப்படுகிறது. எவ்வாறெனினும் பாராளுமன்றத்தின் அனுமதியின்றி எயார் பஸ்களை கொள்வனவு செய்ய அனுமதிக்க வேண்டாம். கோப் குழுவும் அது தொடர்பில் முடிவுகளை அறிவித்துள்ளது. அத்துடன் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அவசியமற்ற செலவுகளை நீக்க வேண்டும். நீக்கக்கூடிய அனைத்தையும் நீக்கி, மக்களுக்கு நிவாரணம் வழங்க முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

நம்பிக்கையில்லா பிரேரணை, புதிய அரசியலமைப்பு தொடர்பில் பேசப்படுகிறது. அதனைப் பேசலாம். ஆனால், தற்போதைய நிலையில் பிளவுகளுக்கு முன் இணைந்து செயற்படுவதிலேயே கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வுகாண அனைவரும் இணைந்து கலந்துரையாட வேண்டும் என்றார்.

Fri, 05/06/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை