புட்டினின் மகள்மார் மீது அமெரிக்கா புதிய தடை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் மகள்மார் உட்பட அவரது நெருங்கிய வட்டத்தை சேர்ந்தோரை இலக்கு வைத்து அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளது.

இந்தப் பட்டியலில் வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவின் குடும்பத்தினர் மற்றும் பிரதான வங்கிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தலைநகர் கியேவுக்கு அருகில் புச்சா நகர வீதிகளில் சிதறிக் காணப்படும் பொதுமக்களின் சடலங்கள் உட்பட ரஷ்ய துருப்புகள் செய்ததாகக் குற்றம்சாட்டப்படும் அட்டூழியங்கள் பற்றி புதிய ஆதாரங்கள் வெளியானதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆதாரமற்ற இந்தப் புகைப்படங்கள் உக்ைரன் அதிகாரிகளால் இட்டுக்கட்டப்பட்டவை என்று ரஷ்யா கூறியது. புச்சா நகர் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்தபோது பொதுமக்கள் கொல்லப்பட்டது பற்றிய படங்கள் வெளியான நிலையிலும், இது “உக்ரைன் அரசின் கொடிய மற்றும் ஆத்திரமூட்டும்” ஒன்று என்று இந்த விடயம் பற்றி புட்டின் குறிப்பிட்டுள்ளார். புச்சா கொலைகள் பற்றி கடந்த புதன்கிழமை பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், “பாரிய போர் குற்றங்களை விட குறைவாக எதுவும் நடக்கவில்லை” என்றார்.

“இந்த குற்றவாளிகளை பொறுப்புக்கூற செய்வதற்கு பொறுப்புடைய நாடுகள் ஒன்றிணைய வேண்டும்” என்று பைடன் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் புட்டினின் மகள்களான கடரினா விளாடிமிரோனா டிகொனோவா மற்றும் மரியா விளாடிமிரோனா வொரொன்சோவா ஆகியோர் தடைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. புட்டினின் வயதுவந்த குழந்தைகளாக இருப்பதால் அவர்களின் சொத்து மற்றும் சொத்துகள் மீதான வருவாய் முடக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் டிகொனோவா, ரஷ்ய அரசு மற்றும் பாதுகாப்பு துறைக்கு உதவும் ஒரு தொழில்நுட்ப நிர்வாகியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அவரது சகோதரியான வொரொன்சோவா, அரச நிதியிலான திட்டம் ஒன்றுக்கு தலைமை வகிக்கிறார்.

புட்டினின் மகள்மார் இலக்கு வைக்கப்பட்டது பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர்கள் தமது தந்தையின் சில சொத்துகளை கட்டுப்படுத்துவதாக அமெரிக்கா கருதுகிறது, என்று பைடன் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம் அரசில் செல்வாக்கு செலுத்தும் எட்டு செல்வந்தர்கள் மற்றும் ரஷ்ய வங்கிகளுக்கு எதிராக பிரிட்டன் மேலும் தடைகளை அறிவித்துள்ளது. போர் குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் ரஷ்ய நிலக்கரி இறக்குமதிக்கு தடை விதிப்பது பற்றி ஐரோப்பிய ஒன்றியம் விவாதித்து வருகிறது.

அமெரிக்காவின் புதிய தடைகள் பற்றிய அறிவிப்பை அடுத்து, “எந்த ஓர் உறுதியற்ற நிலையையும் பொறுத்துக்கொள்ளப்போவதில்லை” என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Fri, 04/08/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை