நாட்டின் நிதி நெருக்கடிக்கு அரசு மட்டுமே பொறுப்பல்ல

பாராளுமன்றம் மூலமே தீர்வு காணல் அவசியம் - அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு

 

நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடிக்கு அரசாங்கம் தனியே பொறுப்புக் கூற முடியாது. பாராளுமன்றத்தினூடாக அதற்கு தீர்வு பெற்றுக் கொள்வது அவசியமென நிதியமைச்சர் பந்துல குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில்  தெரிவித்தார். அதேபோன்று நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்டதல்ல. தொடர்ந்து நாட்டை ஆண்டு வந்த அரசாங்கங்கள் அனைத்தும் இதற்கு பொறுப்புக் கூறவேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

1978 முதல் ஆரம்பமான இந்த நெருக்கடி 2015 ஆம் ஆண்டு உக்கிரமடைந்தது. நாடு சுமக்க முடியாத அளவில் கடன்களை கடந்த அரசாங்கம் பெற்றுக் கொண்டதன் விளைவையே இன்று அனுபவிக்க நேர்ந்துள்ளதென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்:

அரசியலமைப்பின் 45 ஆவது சரத்துக்கிணங்க நிதி தொடர்பான பொறுப்பு பாராளுமன்றத்திற்கே உரியது. அதன்படி ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் அதற்கான பொறுப்புள்ளது.

நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் கடன் பெற்றுக் கொள்ளாத எந்த அரசாங்கமும் கிடையாது. வரவுக்கு மேல் செலவு என்ற நிலையே தொடர்கிறது. கடனைப் பெற்றுக் கொண்டு அதற்கான வட்டியுடன் முதலும் செலுத்த நேரிட்டுள்ளது.

எமது ஏற்றுமதி வருமானம் 10 பில்லியனாக உள்ளபோது இறக்குமதிக்கான செலவு 22 பில்லியனாக உள்ளது. தற்போது நாட்டில் இடம்பெறுவது அரசியல் நெருக்கடியல்ல. தொழில்நுட்ப நெருக்கடியே. நிதி முகாமைத்துவம் அவசியமாகிறது. அதற்கு தீர்வு காண்பதில் பாராளுமன்றம் முன்னின்று செயற்பட வேண்டும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்புவதால் நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கோ பால் மா நெருக்கடிக்கோ தீர்வு கிடைக்காது. இது தேசிய நெருக்கடியாக கவனத்திற் கொள்ளப்பட்டு அனைவரும் இணைந்து இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டுமென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Thu, 04/07/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை