மூன்று வருடங்களில் அனைவருக்கும் சுத்தமான நீர், சுகாதார வசதிகள்

அரசாங்கத்தின் தேசிய இலக்கு என்கிறார் ஜனாதிபதி

எதிர்வரும் மூன்று வருடங்களில் அனைவருக்கும் சுத்தமான நீர், சுகாதாரம் மற்றும் நீர் தொடர்பான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதே அரசாங்கத்தின் தேசிய இலக்கு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள நீர் வழங்கல் திட்டங்களின் கொள்ளளவையும் தரத்தையும் மேம்படுத்தி, நாடு முழுவதும் புதிய நீர் திட்டங்களை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். ஜப்பானின் குமமோட்டோவில்  (23) முற்பகல் ஆரம்பிக்கப்பட்ட 4வது ஆசிய பசுபிக் நீர் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

"நிலையான வளர்ச்சிக்கான நீர்: உகந்த பயன்பாடுகள் மற்றும் அடுத்த தலைமுறை" என்ற தலைப்பில் இந்த ஆண்டு நடைபெறும் மாநாட்டில், ஜப்பான் உட்பட ஆசிய- பசுபிக் பிராந்தியத்தில் உள்ள 48 நாடுகளின் அரச மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். 2017 இல் மியான்மாரில் நடைபெற்ற 3வது ஆசிய-பசுபிக் உச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட "யாங்கூன் பிரகடனத்தில்" அளிக்கப்பட்ட பரிந்துரைகளை எவ்வாறு செயல்படுத்துவது மற்றும் பல்வேறு நீர் பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட்டது.

உச்சிமாநாட்டின் முன்னேற்றம் மார்ச் 2023 இல் நடைபெறும் ஐ.நா நீர் உச்சிமாநாட்டில் "குமமோட்டோ பிரகடனமாக" அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "கும்மோட்டோ பிரகடனம் என்பது நீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உயர்மட்ட தலைவர்களின் பங்களிப்புடன் கட்டியெழுப்பப்படும் அபிலாஷைகளின் தொகுப்பாகும். “இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நாம் நமது அறிவை ஒன்றிணைக்க முயற்சி செய்ய வேண்டும். " என்று ஆசிய-பசுபிக் நீர் உச்சி மாநாட்டின் தலைவர் யோஷியுகி மோரி குறிப்பிட்டார்.

“காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை பேரழிவுகள், சுகாதாரம் மற்றும் வறுமை போன்ற சமூகத்தின் பல சவால்களுக்கு நீர் பிரச்சினை அடிப்படையாக உள்ளன. அண்மைக்காலங்களில் நீர் தொடர்பான பேரழிவுகள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகின்றன. ஆசிய- பசுபிக் பிராந்தியத்தில், கடந்த 30 ஆண்டுகளில் நீர் தொடர்பான பேரழிவுகள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளன. வறுமையை ஒழிக்க தண்ணீரைப் பயன்படுத்தி உள்நாட்டு சுகாதார சூழலை மேம்படுத்துவது அவசியம். ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் எங்கள் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம், ”என்று ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றுநோய் பரவிய போதும், கடந்த இரண்டு வருடங்களில் ஏனைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் 50% சதவீதத்திற்கும் அதிகமாக நீர் இணைப்புக்களை பொதுமக்களுக்கு வழங்க முடிந்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று நீர் சுழற்சி முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கு அவசியமான நீர் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடிந்துள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் விளைவாக வளங்களை பெற்றுக்கொள்வதற்குள்ள வாய்ப்பு தடைப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கடந்த இரண்டு வருடங்களில், தமது அரசாங்கத்தின் அபிவிருத்தி முயற்சிகளின் கொள்கையான பங்கேற்பு அபிவிருத்திக் கோட்பாட்டைப் பயன்படுத்தி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கியதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இந்த தீர்மானமிக்க காலகட்டத்தில் நமது பொருளதார மீட்சிக்கு உதவும் எமது நிலையான முயற்சிகளுக்கான முதலீட்டு வாய்ப்புகள், தொழில்நுட்ப பரிமாற்றம், நிதியுதவி, விரிவான அபிவிருத்தி உதவிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகியவற்றுக்காக வழங்கப்படும் ஒத்துழைப்பை இலங்கை அரசாங்கம் வரவேற்கிறது என்பதை ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் சஞ்சீவ் குணசேகர அவர்கள் ஆரம்ப விழா மற்றும் அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.

Mon, 04/25/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை