நைஜீரியாவில் சட்டவிரோத எண்ணெய் கிடங்கில் தீ: 100இற்கு மேற்பட்டோர் பலி

நைஜீரியாவில் சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்புக் கிடங்கு ஒன்றில் பரவிய தீயில் 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உள்ளூர் அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவின் ரிவர்ஸ் மற்றும் இமா மாநிலங்களின் எல்லைப் பகுதியில் கடந்த ​ெவள்ளிக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

“சட்டவிரோத நிலத்தடி தளம் ஒன்றில் தீ ஏற்பட்டிருப்பதோடு இதனால் 100க்கும் அதிகமானவர்கள் அடையாளம் காண முடியாத வகையில் தீயில் கருகியுள்ளனர்” என்று பெற்றோலிய வளங்கலுக்கான அரச ஆணையாளர் குட்லக் ஒபியா தெரிவித்துள்ளார்.

திடீரென தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும், பலி எண்ணிக்கை மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. பொலிஸார் இந்தச் சம்பவம் தொடர்பாக எண்ணெய்க் கிணற்றின் உரிமையாளரைத் தேடி வருகின்றனர்.

எண்ணெய் உற்பத்தி செய்யும் நைகர் டெல்டா பிராந்தியத்தில் நிலவும் வேலையின்மை மற்றும் வறுமை காரணமாக அங்கு சட்டவிரோத மசகு சுத்திகரிப்பு செயற்பாடு கவர்ச்சிகரமான வர்த்தகமாக மாறியுள்ளபோதும் அது ஆபத்து மிக்கதாக உள்ளது.

பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்குச் சொந்தமாக குழாய்களில் இருந்து மசகு எண்ணெயை எடுத்து அதனை தற்காலிக தொட்டிகளில் சுத்திகரிக்கப்படுகிறது.

ஆபிரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நாடாக நைஜீரியா உள்ளது. சட்டவிரோத மசகு எண்ணெய் சுத்திகரிப்புகளால் கடந்த சில ஆண்டுகளில் 2 பில்லியன் டொலருக்கு மேல் பெறுமதியான சுமார் 53 மில்லியன் பீப்பாய்களை நாடு இழந்திருப்பதாக நைஜீரிய அரசு குறிப்பிட்டுள்ளது.

ரிவர்ஸ் மாநிலத்தில் கடந்த ஒக்டோபரில் மற்றொரு சட்டவிரோத சுத்திகரிப்பு கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த மசகு எண்ணெய் திருட்டை தடுப்பதற்கு நைஜீரிய அரசு கடந்த பெப்ரவரி தொடக்கம் நடவடிக்கை எடுத்தபோதும் இதுவரை சிறிய அளவே முன்னேற்றம் கண்டிருப்பதாக கூறப்படுகிறது.

எனினும் நாட்டின் எண்ணெய் வளங்கள் திருடப்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நைஜீரியாவில் உள்ள சட்ட விரோத சுத்திகரிப்பு நிலையங்களை சோதனை செய்து அழிக்க அரசாங்கம் இராணுவத்தை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

Mon, 04/25/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை