உக்ரைனின் பல நகரங்களிலும் ரஷ்ய படை பயங்கர தாக்குதல்

இரண்டு மாதம் நீடித்த கடும் மோதலுக்குப் பின் தெற்கு துறைமுக நகரான மரியுபோலை முழுமையாக கைப்பற்றியதாக ரஷ்யப் படை அறிவித்துள்ள நிலையில் உக்ரைனின் மேற்கு மற்றும் தென் பகுதிகளில் கடும் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

வடக்கில் உக்ரைனின் கடும் எதிர்ப்பால் பின்னடைவை சந்தித்த ரஷ்யா, டொன்பாஸ் பிராந்தியத்தில் தரைவழி தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. அதேபோன்று தலைநகர் கியேவ் உட்பட வேறு பகுதிகள் மீது நீண்ட தூர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

லிவிவ் மற்றும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியங்களில் நேற்று திங்கட்கிழமை பல வெடிப்புகள் இடம்பெற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

லிவிவ் மற்றும் பிற மேற்கு உக்ரைனிய பகுதிகள் இந்த போரினால் குறைந்ததாக பாதிக்கப்பட்டதாக கருத்தப்பட்டன. குறிப்பாக லிவிவ் மற்ற நகரங்களை விட பாதுகாப்பானது எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று அந்த நகரத்தின் மீது வரிசையாக ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த தகவலை லிவிவ் மேயர் அண்ட்ரி சாடோவி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கியேவில் டினிப்ரோ நதியின் கிழக்குக் கரையில் தீவிர வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அங்கிருக்கும் ரோய்ட்டர்ஸ் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் பற்றி நிர்வாகம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

வடகிழக்கு நகரான கார்கிவில் கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்ற ஷெல் தாக்குதல்களில் பதினெட்டு பேர் கொல்லப்பட்டு 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

“சாதாரண குடியிருப்பு பகுதிகள் மீதான மோட்டார், பீரங்கி தாக்குதல்கள் திட்டமிட்ட பயங்கரவாதத்தை தவிர வேறு ஒன்றுமில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்து வருகிறது. எனினும் அமைதிப் பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் வகையிலான அட்டூழிய செயல்கள் பற்றிய ஆதாரங்கள் இருப்பதாக உக்ரைன் குறிப்பிடுகிறது.

உக்ரைனின் இராணுவமயமாதலை தடுப்பது மற்றும் அபாயகரமான தேசியவாதத்தை ஒழிப்பதற்கான சிறப்பு இராணுவ நடவடிக்கை எனக் கூறியே அந்நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்தது.

கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி ஆரம்பமான ரஷ்ய படையெடுப்புக்குப் பின் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருப்பதோடு பல நகரங்களும் அழிவடைந்துள்ளன. இதுவரை சுமார் நான்கு மில்லியன் உக்ரைனியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

Tue, 04/19/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை