17 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

பெண்கள் உட்பட நால்வருக்கு காயம்

 

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 17 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக இரண்டு பெண்கள் உட்பட நால்வர் காயங்களுக்கு உள்ளாகி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சொகுசு கார்கள், வேன்கள், மற்றும் லொறி உள்ளிட்ட வாகனங்கள் இதில் உள்ளடங்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் களுத்துறைக்கு கிலோமீட்டர் 23.3 பகுதியிலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் கொழும்பை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் இப்பகுதியில் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியதாகவும் பல கிலோமீற்றர்கள் தூரம் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவித்த அவர்கள் விபத்துக்குள்ளான வாகனங்கள் அகற்றப்பட்டு அந்த வீதியை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

வாகன அணியில் முன்னால் சென்ற வேன் ஒன்று சடுதியாக பிரேக் பிடித்ததால் அதன் பின்னால் சென்ற 17 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு பண்டிகைக் கால விடுமுறையில் ஊர்களுக்கு சென்றிருந்தவர்கள் மீண்டும் விடுமுறை கழித்து தமது வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 04/19/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை