போலந்து, பல்கேரியாவுக்கான ரஷ்யாவின் எரிவாயு நிறுத்தம்

ரஷ்யாவின் காஸ்ப்ரோம் எரிவாயு நிறுவனம், போலந்து மற்றும் பல்கேரியாவுக்கு விநியோகத்தை நிறுத்தத் திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

காஸ்ப்ரோம் நிறுவனத்துக்கு நட்பற்ற நாடுகள், மற்ற நாணயங்களுக்குப் பதிலாக ரஷ்ய ரூபிளில் கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறியிருந்தார். அதன் பின்னர், எரிவாயு விநியோகத்துக்கு முதன்முறையாகத் தற்காலிகத் தடை விதிக்கப்படுவதாக தெரிகிறது.

தங்களின் எரிவாயு சேமிப்புக் கிடங்குகளில் முக்கால்வாசி இருப்பு உள்ளதாகவும் தேவை ஏற்பட்டால் வேறு இடங்களிலிருந்து எரிவாயு பெற்றுக்கொள்ளத் தயாராயிருப்பதாகவும் போலந்துப் பிரதமர் கூறினார். நோர்வேயிடமிருந்து போலந்து எரிவாயுவைப் பெறக்கூடும் என்று தெரிகிறது.

ஆனால் பல்கேரியா, அதன் எரிவாயு விநியோகத்துக்கு முழுக்க முழுக்க ரஷ்யாவையே நம்பியுள்ளது. அதன் ஒரே எரிவாயுக் கிடங்கில் சுமார் 17 வீதமான இருப்பே இருந்ததாகக் கூறப்பட்டது.

பல்கேரியா, எரிவாயுக் கட்டணத்தை ரூபிளில் கட்ட மறுத்துவிட்டதா என்பது பற்றி அதன் எரிசக்தி அமைச்சு வெளிப்படையாக ஏதும் சொல்லவில்லை.

ரஷ்யா போலந்துக்கும் பல்கேரியாவுக்கும் எரிவாயு விநியோகம் செய்வதை நிறுத்தி ஐரோப்பாவை மிரட்டுகிறது என்று உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதற்கிடையே, நேட்டோ கூட்டணியின் உறுப்பு நாடான போலந்து, ரஷ்யாவுக்கெதிராக மிகக் கடுமையான தடைகளை விதிக்க முனைகிறது.

போலந்தில் இருக்கும் எரிவாயு போதிய அளவில் உள்ளது என்றும் பயனீட்டாளர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் அந்நாட்டின் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி, ரஷ்யா, உக்ரைனின் நட்பு நாடுகளுக்கு இடையிலான ஒற்றுமையைக் கெடுக்க முனைவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரஷ்யா, எரிசக்தி வளங்களும் ஒருவித ஆயுதம் என்பதை நிரூபிக்கிறது என்று குறிப்பிட்ட அவர், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் ஒற்றுமையாகச் செயல்பட்டு ரஷ்யா மீது எரிசக்தி தொடர்பிலான தடைகளை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அவ்வாறு செய்வதன் மூலம் அந்நாடு எரிசக்தியை ஆயுதமாகப் பயன்படுத்த முடியாமல் போகக்கூடும் என்றும் அவர் கூறினார்.

Thu, 04/28/2022 - 07:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை