பாகிஸ்தான் தற்கொலை தாக்குதல்; சீனர் கொலைக்கு கண்டனம்

பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் தமது நாட்டு பிரஜைகள் மூவர் கொல்லப்பட்டதை கண்டித்துள்ள சீனா, இதில் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை வலியுறுத்தியுள்ளது.

கராச்சி பல்கலைக்கழகத்தின் கன்பூசியஸ் நிறுவகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் பாகிஸ்தான் ஓட்டுநர் ஒருவருடன் மூன்று சீன ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்.

30 வயதான பெண் ஒருவரே தற்கொலை குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.

பலொக் விடுதலை இராணுவம் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

பாகிஸ்தானில் பெரும் முதலீடுகளை செய்து வரும் நெருங்கிய நட்பு நாடான சீனாவின் முதலீடுகள் தொடர்பில் தடை செய்யப்பட்ட பலொக் விடுதலை இராணுவம் எதிர்ப்பு வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது.

'சுரண்டல் திட்டங்களை உடன் நிறுத்தும்படி பலொக் விடுதலை இராணுவம் சீனாவை மீண்டும் ஒரு முறை எச்சரிக்கிறது. இல்லாவிட்டால் எமது எதிர்காலத் தாக்குதல்கள் இதனை விடவும் மோசமாக இருக்கும்' என்று அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கன்பூசியஸ் நிறுவகம் சீனா உலகெங்கும் மேற்கொண்டுவரும் மிதமான இராஜதந்திர மூலோபாயமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தேவையின்றி வெளியே செல்லவேண்டாம் என்று இஸ்லாமாபாத்தில் உள்ள சீனத் தூதரகம் தனது நாட்டவரை எச்சரித்துள்ளது. அதுபோன்ற தாக்குதல் மீண்டும் நடக்காமல் இருப்பதையும் சீனக் குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்யும்படி பாகிஸ்தானிய அதிகாரிகளிடம் அது வலியுறுத்தியது.

Thu, 04/28/2022 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை