பிரான்ஸ் ஜனாதிபதியாக மக்ரோன் மீண்டும் வெற்றி

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் எமானுவேல் மக்ரோன் வெற்றியீட்டி மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு பதவியை கைப்பற்றியுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மரின் லே பென் மீண்டும் தோல்வியை சந்தித்தபோதும், நாட்டில் தீவிர வலதுசாரியின் அதிக வாக்குகளை பதிவு செய்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் மக்ரோன் 58.55 வீத வாக்குகளை பெற்று அமோக வெற்றியீட்டியதோடு, லே பென் 41.45 வீத வாக்குகளை வென்றார். இதன்மூலம் மக்ரோன் எதிர்பார்த்ததை விடவும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளார்.

ஈபிள் கோபுரத்திற்கு அருகில் கூடிய தனது ஆதரவாளர்களிடம் பேசிய மையவாதத் தலைவராக 44 வயது மக்ரோன், தற்போது தேர்தல் முடிந்துவிட்டதாகவும் தாம் அனைவருக்குமான ஜனாதிபதி என்றும் தெரிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகளில் இரண்டாவது தவணைக்கு வெற்றியீட்டிய முதல் ஜனாதிபதியாகவும் மக்ரோன் பதிவாகி உள்ளார்.

இதில் 53 வயதான லே பென் தோல்வியை சந்தித்தபோதும் கணிசமான வாக்குகளை வென்றிருப்பதும் அவரின் பெரும் முன்னேற்றத்தை காட்டுவதாக உள்ளது. தேர்தலில் தோல்வியுற்றாலும், தான் பெற்ற வாக்குகள் வெற்றியை குறிப்பதாக லே பென் தெரிவித்தார்.

இதுவரை இல்லாத அளவுக்கு வலதுசாரிகள் அதிக வாக்குகளை வென்றிருப்பது பிரான்ஸ் அரசியல் ரீதியாக ஆழமாகப் பிளவுபட்டிருப்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் லே பென், மெக்ரோனிடம் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தலில் வலதுசாரி தேசியவாதக் கொள்கைகளை எதிர்ப்போர் மக்ரோனுக்கு வாக்களித்துள்ளதை லே பென் ஒப்புக்கொண்டார்.

நாட்டை மீண்டும் இணைக்கவும் தமக்கு எதிராக வாக்களித்தோரின் சினத்தைத் தணிக்கவும் மக்ரோன் உறுதியளித்தார்.

மக்ரோனின் வெற்றிக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தனது “உண்மையான நண்பர்” என மக்ரோனை குறிப்பிட்டு, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சனும் அவருடைய வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அணுவாயுதச் சக்தி கொண்ட ஒரே நாடாக பிரான்ஸ் உள்ளது. எனவே, மக்ரோனின் வெற்றி, ஒன்றியத்தின் தலைமைத்துவ நிலைத்தன்மையை மீண்டும் உறுதி செய்வதாக உள்ளது.

இந்தத் தேர்தலில் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 72 வீதத்திற்கும் குறைவாக உள்ளது. இது 1969க்குப் பின்னரான தேர்தல்களில் பதிவான குறைவான வாக்கு எண்ணிக்கையாகும்.

மேலும், 30 இலட்சத்துக்கும் அதிகமானோர் செல்லாத வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளாத மக்ரோனுக்கு எதிரான போராட்டக்காரர்கள், பல்வேறு நகரங்களில் குறிப்பாக பாரிஸ், ரென்ஸ், டெளலெளஸ் மற்றும் நான்டெஸ் ஆகிய நகரங்களில் பேரணிகளை நடத்தினர்.

Tue, 04/26/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை