உக்ரைனிய நகரங்களில் ரஷ்யா ‘மனிதாபிமான பாதைகள்’ திறப்பு

கியேவ் நகரை கைப்பற்றும் முயற்சி தீவிரம்

ரஷ்ய இராணுவம் உக்ரைனின் பல நகரங்களில் நேற்று திங்கட்கிழமை தாக்குதல்களை நிறுத்தி மனிதாபிமான பாதைகளை திறந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது பற்றிய அறிவிப்பை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டிருந்தது.

மொஸ்கோ நேரப்படி நேற்றுக் காலை 10 மணிக்கு உக்ரைன் தலைநகர் கியேவ் மற்றும் கார்கிவ், மரியுபோல் மற்றும் சமி நகரங்களில் இந்த மனிதாபிமானப் பாதை திறக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மக்ரோன் விடுத்த தனிப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஆர்.ஐ.ஏ செய்தி நிறுவனம் வெளியிட்ட வரைபடத்தின்படி, கியெவ் நகரின் மனிதாபிமானப் பாதை ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸை நோக்கிச் செல்வதோடு கார்கிவில் இருந்து ரஷ்யாவை நோக்கியே அந்தப் பாதை வரையப்பட்டுள்ளது. மரியுபோல் மற்றும் சமி நகரங்களுக்கான மனிதாபிமானப் பாதை ஏனைய உக்ரைன் நகரங்கள் மற்றும் ரஷ்யாவை நோக்கி உள்ளது.

கியேவில் இருந்து வெளியேற விரும்புபவர்கள் விமானம் மூலமும் ரஷ்யாவுக்கும் பயணிக்க முடியும் என்று ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டது. இந்த வெளியேற்றங்கள் குறித்து ஆளில்லா விமானங்களில் கண்காணிக்கப்படும் என்றும் அது குறிப்பிட்டிருந்தது.

“ரஷ்யா மற்றும் அனைத்து நாகரிக உலகையும் ஏமாற்றும் உக்ரைனின் முயற்சி இந்த முறை தோல்வி அடையும்” என்று அமைச்சு குறிப்பிட்டிருந்தது.

எனினும் உக்ரைனில் இருந்து வெளியேறும் மக்கள், பெலாரஸ் அல்லது ரஷ்யாவிற்கு அகதியாக செல்லும் வகையில் திறக்கப்படும் பாதை தொடர்பான ரஷ்ய முன்மொழிவு ‘முற்றிலும் நியாயமற்றது’ என்று உக்ரைன் கூறியுள்ளது.

“இது முற்றிலும் நியாயமற்றது. மக்கள் படும் துன்பம், விரும்பிய சூழலை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது,” என்று ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியின் செய்தித் தொடர்பாளரை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் வெளியானதோடு, இதனால் 1.5 மில்லியன் உக்ரைனியர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். மேற்குலகம் விதித்துள்ள தடைகளால் ரஷ்யாவின் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

“சிறப்பு இராணுவ நடவடிக்கை” என்று அழைக்கப்பட்ட உக்ரைன் மீதான படையெடுப்பை ரஷ்யா கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி ஆரம்பித்தது. பொதுமக்கள் இருக்கும் பகுதிகள் மீது தாக்குதல் நடத்துவதில்லை என்றும் உக்ரைனை ஆக்கிரமிக்கும் திட்டம் இல்லை என்றும் ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது.

இந்தப் பதற்றம் காரணமாக எண்ணெய் விலை 24 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தடை செய்வது குறித்து ஆய்வு செய்து வருவதாக அமெரிக்க நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. உலக எண்ணெய் விநியோகத்தில் ரஷ்யா 7 வீதத்தை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் ஐந்தாவது மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதி நாடாக இருக்கும் ஜப்பானும் ரஷ்யாவின் எண்ணெயை தடை செய்வது குறித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் பெரிதும் தங்கியுள்ள ஐரோப்பாவும் இந்தத் தடை குறித்து திறந்த நிலைப்பாட்டில் இருப்பதாக இது தொடர்பான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

3 மில்லியன் மக்கள் வாழும் உக்ரைன் தலைநகர் கியேவ் மீது முழு வீச்சில் படையெடுக்க ரஷ்யா வளங்களை சேகரிக்க ஆரம்பித்திருப்பதாக உக்ரைன் ஆயுதப் படைகளின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தலைநகரை நோக்கி பெலாரஸில் இருந்து தெற்குப் பக்கமாக ரஷ்ய இராணுவம் முன்னேற்றம் கண்டபோதும் அண்மைய தினங்களில் அது மெதுவடைந்து காணப்பட்டது.

எனினும் டாங்கர்கள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட படை பிரிவுகள் மூலம் கியேவ் நகரின் இர்பின் பகுதியை நோக்கி முன்னேறி வருவதாகவும் உக்ரைன் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

ரஷ்ய இராணுவ கமாண்டர்கள் எரிபொருளை கப்பல் மூலம் தங்கள் படைகளுக்கு, பெலாரஸிலிருந்து செர்னோபிள் விலக்கு மண்டலம் வழியாக அனுப்பி வருகின்றனர் என்றும் கிழக்கு நகரங்களான கார்ஹிவ், செர்னிஹிவ், சுமி மற்றும் தெற்கு நகரமான மைகோலாயிவ் ஆகிய பகுதிகளை ரஷ்ய இராணுவம் சுற்றி வளைப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருங்கடல் நகரான மரியுபோலில் சுமார் 200,000 பேர் முற்றுகையில் சிக்கிய நிலையில் உள்ளனர். ரஷ்யப் படைகள் தொடர்ந்து ஷெல் குண்டுகளை வீசி வரும் நிலையில் கடந்த ஆறு நாட்களால் அவர்கள் நிலவறைகளில் உறங்கி வருகின்றனர். நகருக்கான உணவு, நீர், மின்சாரம் மற்றும் சூடேற்றும் வசதிகள் துண்டிக்கப்பட்டிருப்பதாக உக்ரைன் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

நகரில் உள்ள 400,000 பேரில் பாதி அளவானோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து வெளியேற்றப்பட திட்டமிடப்பட்டபோதும் இரண்டாவது முறையாகவும் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. அந்த நகரில் அமுல்படுத்தப்படவிருந்த யுத்த நிறுத்தம் முறிவடைந்தததை அடுத்து இந்த நிலை ஏற்பட்டது. இதற்கு இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டி உள்ளன.

தெற்கு நகரான மைகொலயிவ் நகர் மீது ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உக்ரைன் நிர்வாகம் நேற்று தெரிவித்தது.

ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் உக்ரைனில் இதுவரை 20 சிறுவர்கள் உட்பட 364 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கடந்த ஞாயிறன்று கூறியிருந்தது. இதில் மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

பொதுமக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுவதற்கான நம்பகமான அறிக்கைகளை காண முடிவதாகவும் போர் குற்றம் ஒன்று பற்றி விசாரணைக்காக இவை ஆவணப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனில் ரஷ்யா போர்க் குற்றங்களில் ஈடுபடுவது பற்றி விசாரணை ஒன்று தேவைப்படுவதாக ஐரோப்பிய ஆணைக்குழு தலைவர் வொன் டெர் லெயேன் தெரிவித்துள்ளார்.

“இந்த விடயம் பற்றி தெளிவான மற்றும் வலுவான விசாரணை ஒன்று தேவைப்படுவதாக நான் நினைக்கிறேன்” என்று சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் மீது கொடூரங்களை புரியும் ரஷ்யா தண்டனைக்கு முகம்கொடுக்கும் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

“கல்லறையைத் தவிர உங்களுக்கு இந்த பூமியில் அமைதியான இடம் ஒன்று இருக்காது” என்று தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர் கூறினார்.

உலகின் பல இடங்களிலும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்றதோடு, ரஷ்யா மீது கடும் தண்டனைகளை விதிக்கும்படியும் மேலும் ஆயுதங்களை தரும்படியும் மேற்குலக நாடுகளிடம் உக்ரைன் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனை இராணுவமயமற்ற, நாஜி செல்வாக்கற்ற மற்றும் நடுநிலையானதாக மாற்ற விரும்புவதாக புட்டின் குறிப்பிட்டுள்ளார். மேற்குலகின் தடைகள் “ஒரு போர் பிரகடனமாக” கருதுவதாகவும் கடந்த சனிக்கிழமை அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tue, 03/08/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை