உக்ரைனில் ரஷ்ய தாக்குதல் மந்தம்: பேச்சில் முடிவில்லை

உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல்கள் நேற்று தொடர்ந்து இடம்பெற்றபோதும் குறிப்பிடத்தக்க அளவு மந்தமடைந்திருந்ததாகவும் ரஷ்யாவின் இரண்டாவது மூத்த தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாகவும் உக்ரைன் இராணுவம் மற்றும் உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.

குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி வரும் நகரங்களில் இருந்து அச்சமடைந்த பெரும் எண்ணிக்கையான மக்கள் வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில் உக்ரைன் இராணுவ உளவுப் பிரிவு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், முற்றுகையில் இருக்கும் கார்கிவ் நகருக்கு அருகில் வைத்து ரஷ்ய இராணுவ ஜெனரல் ஒருவரை உக்ரைனிய படை கொன்றதாக தெரிவித்துள்ளது.

“ரஷ்யாவின் 41 ஆவது படைப்பிரிவின் முதல் பிரதி கமாண்டர் மேஜர் ஜெனரல் விடாலி கெராசிமோவ் திங்கட்கிழமை கொல்லப்பட்டார்” என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சின் உளவுத்துறை தலைமைப் பணியகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மறுபுறம் ரஷ்யப் படையின் முன்னேற்றம் மந்தமடைந்திருப்பதாக ரஷ்ய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பிய நாடு ஒன்றில் இடம்பெறும் மிகப்பெரிய தாக்குதலாக மாறியுள்ள உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால் இதுவரை 1.7 மில்லியன் பேர் அகதியாக்கப்பட்டுள்ளனர். ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் உக்ரைனுக்கு மேற்குலகின் ஆயுத உதவிகள் குவியும் சூழலில் இது ஒரு பரந்த மோதலாக வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் பெலாரஸுக்கு மக்களை வெளியேற்றும் ரஷ்யாவின் மனிதாபிமான பாதையை உக்ரைன் நிராகரித்துள்ளது. எனினும் தெற்கு துறைமுக நகரை ரஷ்யா முற்றுகை இட்டிருக்கும் சூழலில் அங்கு உணவு மற்றும் நீரின்றேல் நூற்றுக்கணக்கானோர் சிக்கி இருப்பதோடு நகர் மீது ரஷ்யா தொடர்ந்து குண்டு வீசி வருவதாகக் கூறப்படுகிறது.

எனினும் சமி மற்றும் மரியுபோலில் இருக்கும் மக்கள் உக்ரைனின் வேறு பகுதிகளுக்கு வெளியேறுவதற்கு ரஷ்யா அனுமதித்த நிலையில் உக்ரைன் அதற்கு ஆதரவு அளித்திருப்பதாக ரஷ்ய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே தலைநகர் கியேவ், சார்ஹிவ், சமி, கார்கிவ் மற்றும் மரியுபோல் நகரங்களில் மக்கள் வெளியேறுவதற்கு ரஷ்யா நேற்று மனிதாபிமான பாதைகளை திறந்தது. இதனை ஒட்டி ரஷ்யா நேற்று போர் நிறுத்தம் ஒன்றையும் அறிவித்தது.

உக்ரைனில் போரை நிறுத்தும் முயற்சியாக கடந்த திங்கட்கிழமை பெலாரஸில் நடந்த மூன்றாம் சுற்று அமைதிப் பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை. அடுத்த சுற்றிலும் இறுதி முடிவு கிட்ட வாய்ப்பு இல்லை என்று பேச்சுவார்த்தையாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் ரஷ்ய மற்றும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர்கள் நாளை வியாழக்கிழமை துருக்கியில் சந்திக்கவுள்ளனர்.

உக்ரைன் தனது மோதல்களை நிறுத்தி, நடுநிலைத்தன்மையை அறிவிக்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் செய்து, கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது மற்றும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பிராந்தியங்களின் சுதந்திரத்தை அங்கீகரித்தால் ரஷ்யாவின் படை நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என்று ரஷ்ய அரச பேச்சாளர் ட்மிட்ரி பெஸ்கொவ் வலியுறுத்தினார்.

Wed, 03/09/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை