நாட்டில் ஐந்து சதவீதமான மருந்துகளுக்கே தட்டுப்பாடு

இறக்குமதி பிரச்சினைக்குதீர்வு காணப்படாவிடின் தட்டுப்பாடு அதிகரிக்க சந்தர்ப்பம்

இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் நேற்று எச்சரிக்கை

 

தற்போது நாட்டில் ஐந்து சதவீதமான மருந்துகளுக்கே தட்டுப்பாடு நிலவுகிறது. இதைத் தடுக்கும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளாவிட்டால் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இத்தட்டுப்பாடு மென்மேலும் அபாயகரமான அளவுக்கு அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாக இலங்கை மருந்தாக்கல் கைததொழில் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இச்சம்மேளனம் நேற்று (02) கொழும்பில் நடத்திய ஊடகவியலளர் மாநாட்டில் மருந்துகள் இறக்குமதி தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டது.இதில், உயிர் காக்கும் முக்கிய மருந்துகளுக்கும் எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் இதே நிலை தொடரும் பட்சத்தில் நாடளாவிய ரீதியில் கடுமையான தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது சாதாரண வலி நிவாரணி மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதைப் போலவே, கொலஸ்ட்ரோல், தைரோயிட் மருந்துகள், நீரிழிவு மருந்துகள் போன்றவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்டலாம். இலங்கை தனது மருந்து தேவையில் 85 சதவீதமானவற்றை இறக்குமதி செய்கிறது. இவற்றில் அரசாங்கம் ஐம்பது வீதத்தையும் தனியார் துறை ஐம்பது வீதத்தையும் இறக்குமதி செய்கிறது. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகார சபை எமது பிரச்சினைகளில் மெத்தனமாகச் செயல்படுகிறது. அதிகார சபையின் மெத்தனம், டொலர் பிரச்சினை, நடைமுறை சாத்தியமற்ற விலைச் சூத்திரம் என்பவற்றால் போதிய மருந்துகள் நாட்டில் கிடைக்காத நிலை ஏற்படப் போகிறது. இதை முன்கூட்டி மக்களிடம் தெரிவிப்பதற்காகவே இச் சந்திப்பை ஏற்பாடு செய்தோம் என இச் சம்மேளனத்தின் தலைவர் சஞ்சீவ விஜேசேகர தெரிவித்தார்.

இது தொடர்பாக மத்திய வங்கியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் ஆனால் எந்தப் பலனும் கிட்டவில்லை என்றும் கூறிய அவர், அடுத்த ஆறு வாரங்களுக்கு மருந்து கையிருப்பு உள்ளதாகவும் இறக்குமதியாகும் மருந்துகள் களஞ்சியசாலைகளில் குளிர் நிலையில் பேணப்பட வேண்டிய அவசியம் உள்ளதால் மின்வெட்டு மற்றும் ஜெனரேட்டர்களை இயக்கும் டீசல் தட்டுப்பாடு தமக்கு மேலதிக பிரச்சினைகளாக இருப்பதாகவும் இச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தார்.

“மருந்துகள் இறக்குமதி செய்வதற்கு வங்கிகளில் கடன் பத்திரங்களை திறக்க வேண்டியிருக்கிறது. கடன் பத்திரங்களைத் திறந்தாலும் வங்கிகளில் டொலர் இல்லாததால் மருந்துகளை உரிய காலத்தில் இறக்குமதி செய்ய முடிவதில்லை.

தாமதாக மருந்து இறக்குமதி செய்யப்பட்ட பின்னர் நாம் அதற்கான விலையை செலுத்தும் போது டொலர் அதிகரிப்பால் நஷ்டமடைய நேர்ந்துவிடுகிறது. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு 1919ம் ஆண்டு மருந்து விலைகளையே பின்பற்றிவருகிறது.

கடந்த வருடம் டொலர் 194 ரூபாவாக இருந்தது. அதை தற்போதும் பின்பற்றி அந்த விலைகளில் மருந்துகளை விற்பனை செய்யச் சொல்வது பொருத்தமற்றது என்று இங்கு கேள்விகளுக்கு பதிலளித்த சம்மேளனத்தின் பிரதித் தலைவர் அஸாம் ஜாவட் தெரிவித்தார்.

இலங்கையில் மருந்துகளை தாராளமாகக் கிடைக்கச் செய்வது அவசியம் என்றும் இதன் பொருட்டு மாதம் 20 முதல் 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கித்தரப்பட வேண்டும் என்றும் இம்மாநாட்டில் கூறப்பட்டது.

ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அதிகாரிகள் தம்முடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்து இன்றைய சூழல்களுக்கு அமைவான புதிய மருந்து விலைப்பட்டியல் ஒன்று தயாரிக்கப்படுவதன் அவசியமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

எந்தவொரு மருந்து கம்பனியும் நஷ்டத்துக்கு இறக்குமதி செய்து, வியாபாரம் செய்யாது என்றும் சம்மேளத் தலைவர் சஞ்சீவ குறிப்பிட்டார்.

-அருள் சத்தியநாதன்

Thu, 03/03/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை